Monday, August 18, 2008

எம்.ஜி.ஆர் படங்கள்: பரபரப்பு தீர்ப்பு


எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த மூன்று சூப்பர் ஹிட் படங்களான நாடோடி மன்னன், அடிமைப்பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவற்றின் முழு உரிமையும் எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தம் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

எம்.ஜி.ஆர் தனது எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து நடித்த படங்கள் நாடோடி மன்னன், அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன்.

இந்த 3 படங்களையும் திரையிடும் உரிமை தங்களுக்குத்தான் சொந்தம் என்று சேலம் சாந்தி பிலிம்ஸ் உரிமையாளர் ராஜமாணிக்கம், சேலம் கற்பகம் சர்க்யூட் உரிமையாளர் கவிதா, எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிர்வாகி நிர்மலா ரவீந்திரன் ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த 3 படமும் எங்களுக்குத்தான் சொந்தம், எங்களைத் தவிர வேறுயாரும் இந்தப் படங்களை வெளியிடக்கூடாது என இவர்கள் தங்கள் மனுக்களில் வலுயுறுத்தியிருந்தனர்.

நீதிபதி எம்.ஜெயபால் இவற்றை விசாரித்தார். இந்த 3 படங்களையும் திரையிட சாந்தி பிலிம்ஸுக்கும், கற்பகம் சர்க்யூட் நிறுவனத்துக்கும்தான் உரிமை உள்ளது என்று தீர்ப்பு கூறினார்.

இதை எதிர்த்து, எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அதில், இந்தப் படங்கள் அனைத்தும் எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.

இதனை எதிர்த்து சாந்தி பிலிம்ஸ், கற்பகம் சர்க்யூட் ஆகியோர் எதிர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினார்கள்.

இந்த வழக்கில் இருதரப்பிலும் தாக்கல் செய்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டது. சாந்தி பிலிம்ஸ், கற்பகம் சர்க்யூட் தாக்கல் செய்த ஆவணங்கள் தவறானது என்பது தெளிவாக தெரிகிறது. எனவே இந்த 3 படங்களும் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸுக்கே சொந்தம். அவர்கள் இந்த 3 படங்களையும் திரையிடலாம் என்று அனுமதி அளிக்கிறோம், என தீர்ப்பு கூறிவிட்டனர் நீதிபதிகள்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்துக்குப் போகப்போவதாக சாந்தி பிலிம்ஸ், கற்பகம் சர்க்யூட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நமீதாவின் அரசியல்: அரை நிர்வாணத்தில் சுந்தர்!


இது என்ன... தலைப்பை மாற்றிப் போட்டு விட்டார்களோ என யோசிக்க வேண்டாம். நிஜம்தான்.

விரைவில் வெளிவரவுள்ள தீ படத்தில் நமீதா அரசியல்வாதியாக நடிக்கிறார். அவரது நாயகன் சுந்தர் சி முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இதில் விசேஷம் (ரொம்ம்ப்ப விசேஷம்...!), படத்தின் ஆரம்பக் காட்சியில் சுந்தர் சி கிட்டத்தட்ட நிர்வாணமாக வருவதுதானாம்!

இது என்ன நமீதாவுக்கு வந்த சோதனை... என்ற யோசனையுடன், படத்தில் அப்படியொரு காட்சிக்கு என்ன அவசியம், ஏன் இந்த விபரீத யோசனை என்றோம் சுந்தரிடம்.

அவர் கூறியதாவது:

கதைப்படி ஹீரோ சென்னை நகருக்கு ஒன்றுமே இல்லாமல் வருகிறான். படிப்பு கிடையாது, பணம் கிடையாது, அட போட்டுக்க துணிகூட கிடையாது.

அப்படியொரு மோசமான நிலையிலிருந்து இரண்டே மாதங்களில் பெரிய பணக்காரனாக, அரசியல்வாதியாக மாறுகிறான்.

இந்தப் படத்தில் நான் ஏற்றுள்ள இரண்டு வேடங்களுமே, மிகவும் பேசப்படக் கூடியவை. அந்த அளவு சிறப்பாக வந்துள்ளது. என் நடிப்பு வாழ்க்கையில் மிகச்சிறந்த வேடங்களாக இவை அமையும், என்றார்.

'சண்ட' படத்தில் சுந்தருக்கு ஜோடியாக அறிமுகமான ராகினி இந்தப் படத்திலும் நடிக்கிறார். இவர் ஒரு விதத்தில் குஷ்பு மற்றும் சுந்தரின் தூரத்து உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு ஜோடி நமீதா.

அதிரடி அரசியல்வாதியாக அறிமுகமாகி, சுந்தர் மீது காதலாகிக் கசிந்துருகும் வேடமாம். கவர்ச்சியில் இதுவரை எந்தப் படத்திலும் நடிக்காத அளவு புகுந்து விளையாடி இருக்கிறாராம்

குசேலனால் நஷ்டம்-ரூ.10 கோடி திருப்பி தரும் ரஜினி?


குசேலன் படம் தமிழ்நாட்டில் சரியாகப் போகவில்லை என்றும், அந்த நஷ்டத்தை ஈடுகட்ட படத்தின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினி ரூ.10 கோடியைத் திருப்பித் தருவதாகவும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

குசேலன் திரைப்படத்தை ரஜினியின் குருநாதர் பாலச்சந்தரும், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமாரும் தமிழில் தயாரித்திருந்தனர். இதன் தெலுங்குப் பதிப்பை விஜயகுமாரும் அஸ்வினி தத்தும் தயாரித்தார்கள்.

தமிழில் நடித்ததற்காக பாலச்சந்தரிடம் சம்பளம் வாங்கிக் கொள்ளாத ரஜினிகாந்த், தெலுங்குப் பதிப்புக்கு மட்டும் சம்பளம் பெற்றுக் கொண்டார். தமிழில் அந்தப் பணம் முழுமையாக பாலச்சந்தருக்கே சேரட்டும் என்றும் பெரிய அளவில் லாபம் வரும்பட்சத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறிவிட்டாராம்.

படத்தை ரூ.65 கோடிக்கு பிரமிட் சாய்மீரா நிறுவனம் வாங்கி வெளியிட்டது. வழக்கமான ரஜினி படமாக குசேலன் இல்லாததால், நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்களின் ஆதரவைப் பெறமுடியவில்லை குசேலனால்.

ஒகேனக்கல் விவகாரத்தில் தன்னுடைய பேச்சுக்கு கன்னடர்களிடம் ரஜினி வருத்தம் தெரிவித்த பிரச்சினையும் பூதாகரமாகி படத்தின் வசூலைப் பாதித்தது.

பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் பிரமிட் சாய்மிரா நிறுவனத்திடம், தங்கள் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் திரும்பிய ரஜினி படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், ரூ.10 கோடியை திருப்பித் தருவதாக பிரமிட் சாய்மிராவுக்கு குசேலன் தயாரிப்பாளர்கள் சார்பில் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சாய்மிரா நிறுவனத் தலைவர் சாமிநாதன் அளித்துள்ள பேட்டியில், குசேலன் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.21 கோடி வசூலித்துள்ளதாகவும், வரும் நாட்களில் போட்ட பணம் திரும்பக் கிடைத்துவிடும் என்றும் கூறியுள்ளார். விரைவில் குசேலன் வசூல் குறித்து முழு விபரங்களையும் வெளியிடவிருப்பதாகவும் பிரமிட் சாய்மிரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாபா பாணியில்...

ஏற்கெனவே பாபா திரைப்படத்துக்கு வசூல் பாதித்தபோது, படத்தின் தயாரிப்பாளரான ரஜினி விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும், மறைந்த ஜீவி முன்னிலையில் நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடுகட்டும் வகையில் பணத்தை திருப்பித் தந்தது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு முன் இயக்குநர் மணிரத்னமும், தனது இருவர் பட நஷ்டத்தை இதே பாணியில்தான் ஈடுகட்டினார்.

கள்ள நோட்டைத் தடுக்க பாலிமர் ரூபாய் நோட்டு-அரசு திட்டம்


டெல்லி: கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க, ஆஸ்திரேலியாவில் உள்ளதைப் போல, இந்தியாவிலும் பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

பாலிமர் கரன்சி குறித்த தொழில்நுட்பத் தகவல்களை அளித்து உதவுமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

பாலிமர் கரன்சிகள் மூலம் கள்ள நோட்டை அடியோடு தடுக்க முடியும். மேலும் ரூபாய் நோட்டுக்கள் கிழியாது என்பதால், கிழிந்த நோட்டு, கசங்கிய நோட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஆஸ்திரேலிய ரூபாய் நோட்டுக்கள் பாலிமரில் ஆனவை. வழக்கமான தாளில் இல்லாமல் பாலிமரில் அவை அச்சிடப்படுகின்றன. அவை மிகவும் பாதுகாப்பானவை. இதன் காரணமாக அங்கு கள்ள நோட்டுக்களே கிடையாது.

ஆஸ்திரேலிய ரூபாய் நோட்டுக்கள் சிறப்பு பாலிமரில் அச்சிடப்படுகின்றன. இது மிகவும் மெலிதாக இருக்கும். ஆனால் கள்ள நோட்டுக்கள் மிகவும் அடர்த்தியாக இருக்கும். இதை வைத்து எளிதில் கள்ள நோட்டுக்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

மேலும், பெரும்பாலான கள்ள நோட்டுக்கள் தாளில்தான் அச்சிடப்படுகின்றன. இவற்றை எளிதில் கிழித்து விடலாம். ஆனால் பாலிமர் நோட்டுக்களை அவ்வளவு சுலபமாக கிழிக்க முடியாது.

இதுதவிர சுற்றுச்சூழலுக்கும் பாலிமர் ரூபாய் நோட்டுக்கள் உகந்தவையாகும். நீண்ட நாட்களுக்கு இவை பாதுகாப்பாக இருக்கும். ஆனால் வழக்கமான தாளில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் சீக்கிரம் கிழிந்து விடும். கசங்கியும் விடும்.

சாதாரண தாளினால் ஆன கரன்சியை விட பாலிமர் ரூபாய் நோட்டுக்கள் நான்கு மடங்கு காலம் நீடித்த ஆயுளைக் கொண்டதாகும் என்றார் அவர்.

சமீபத்தில், உ.பி. மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டம் தும்ரியாகஞ்ச் என்ற இடத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் கிளை கருவூலத்தில் ரூ.1.25 கோடி கள்ள நோட்டுகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இது அரசையும் மக்களையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கருவூலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் இருந்த வரிசை எண்கள், நிஜ ரூபாய் நோட்டின் வரிசை எண்ணை ஒத்திருந்தது. இது தொடர்பாக ஷெகாவத் அலி என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து பஞ்சாப்-பாகிஸ்தான் எல்லையான கல்ரா செக்டர் பகுதியில் ரூ.10 லட்சம் இந்திய போலி ரூபாய் நோட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் இதுபோல கள்ள நோட்டுக்களின் புழக்கம் மிகப் பெரிய அளவில் உள்ளது. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயும் தீவிரவாத அமைப்புகளும் சேர்ந்து கள்ள நோட்டுகளை இந்தியாவில் புழக்கத்தில் விடுகின்றனர் என்று புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதையடுத்தே கள்ள நோட்டுக்களை ஒழிக்க பாலிமருக்கு மாறுவது குறித்து அரசு யோசித்து வருகிறது.

Friday, April 4, 2008

மீண்டும் நூறாவது நாள்!


சத்யராஜின் மொட்டை நடிப்பில் பரபரப்பாக ஓடிய நூறாவது நாள் ரீமேக் ஆகிறது. சத்யராஜ் கேரக்டரில் அவரே நடிக்கவுள்ளாராம்.

மணிவண்ணன் இயக்கத்தில் உருவான மிரட்டல் படம் நூறாவது நாள். மோகன், நளினிதான் இப்படத்தின் ஜோடி. விஜயகாந்த்தும் கெஸ்ட் ரோலில் வந்திருப்பார். ஆனால் பெயர் முழுவதையும் தட்டிச் சென்றவர் வில்லனாக வந்த சத்யராஜ்.

ஆஜானுபாகுவான சத்யராஜ் இப்படத்துக்காக போட்ட மொட்டை கெட்டப் படு பாப்புலர். இந்தப் படத்திற்குப் பிறகுதான் சத்யராஜ் சூப்பர் டூப்பர் வில்லன் ஆனார்.

இப்போது நூறாவது நாளை ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளாராம் மணிவண்ணன். சத்யராஜ் கேரக்டரில் சத்யராஜே நடிக்கவுள்ளதாக தெரிகிறது. முன்பு இளமையாக இருந்தார் சத்யராஜ். இதனால் அவரது மொட்டை இளசாக இருந்தது. இப்போது வயது ஏறி விட்டதால் மொட்டையும் படு மிரட்டலாக இருக்கும் என நம்பலாம்.

விஜயகாந்த், மோகன் கேரக்டர்களுக்கு ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். மோகன் கேரக்டரில் நடிக்க நான் ரெடி என்று கூறியுள்ளாராம் சத்யராஜின் மகன் சிபிராஜ். இதுகுறித்து சத்யராஜும், மணிவண்ணனும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

நளினி கேரக்டருக்கு பேசாமல் நமீதாவை புக் செய்துடலாமே?

நயனிடம் சிம்பு 'இம்ப்ரஸ்' முயற்சி!

உண்ணாவிரதம் இருக்க வந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டு நயனதாராவை இம்ப்ரஸ் செய்ய முயற்சித்தார் சிம்பு. ஆனால் அவரோ சிம்பு பக்கமே திரும்பாமல் எஸ்கேப் ஆகி விட்டார்.

காதல் முறிந்து, வார்த்தைப் போரும் வலுத்து, ஒரு வழியாக எல்லாம் ஓய்ந்து, ரசிகர்களும் கிட்டத்தட்ட மறந்து போன விஷயம் சிம்பு - நயனதாரா காதல்.

ஆனால் சிம்புவால் மட்டும் இன்னும் நயனதாராவை மறக்க முடியவில்லை போலும். இன்று சென்னையில் நடந்த திரையுலகினரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரதிபலித்தது.

எப்படியும் நயனதாரா வந்துதானே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்தாரோ என்னவோ, சிம்புவின் பார்வையில் ஒரு அலை காணப்பட்டது. நயனதாரா வந்தபோது அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்ற சிம்பு, நயனதாரா அருகில் இருந்த சீட்டில் டக்கென்று உட்கார்ந்து கொண்டார்.

நயனதாராவின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் நயனதாரா அந்தப் பக்கமே திரும்பவில்லை. மேலும் அருகில் இருந்த பிற கலைஞர்களுடன் பேசத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் திரிஷாவுடன் ஜாலியாக பேசத் தொடங்கினார். இம்ப்ரஸ் செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் சற்றே வருத்தம் அடைந்த சிம்பு, ஏமாற்றத்துடன் எழுந்து கர்நாடகம் தண்ணீர் கொடுக்காதது தவறு என்று மைக்கைப் பிடித்து பேச ஆரம்பித்தார்.

“உலகத்தை தமிழன் ஆளுவான்” -டென்மார்க் தமிழர் எடுக்கும் படம

“உலக நாடுகள் முழுவதும் ஈழத்தமிழர்கள் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கென்று சொல்லிக் கொள்ளதான் ஒரு நாடு இல்லை” கண்களில் கனவுகளும் ஏக்கங்களும் மின்ன பேச ஆரம்பிக்கிறார் கி.செ.துரை. ஆனால், உலகத்தையே ஒரு குடையின் கீழ் ஆளப்போகிறான் தமிழன். இது என் கனவு மட்டுமல்ல. திருமூலரும், திருவள்ளுவரும் கூட இதைதான் சொன்னார்கள் என்கிறார் துரை. டென்மார்க்கில் வசிக்கும் இந்த இலங்கை தமிழர், தனது கனவை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் இளம் புயல்.

உலகத்தை தமிழால் வாழ வைப்போம் என்பதுதான் படத்தின் மையக்கரு. இன்டர்நெட் மூலம் உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர பாடுபடும் ஒரு இளைஞன் ஒரு தனி தீவில் தனது திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். இதை தடுத்து அழிக்க நினைக்கும் வில்லன், செயற்கை சுனாமியை உருவாக்கி அந்த தீவையே மூழ்கடிக்க நினைக்கிறான். வில்லனின் யுக்தியை முறியடிக்கிற ஹீரோ எப்படி தனது லட்சியத்தை நனவாக்கினார் என்பது முடிவு. தொண்ணூறு சதவீத படத்தை டென்மார்க்கில் எடுத்திருக்கிறார் துரை. அங்கே ஐநூறுக்கும் மேற்பட்ட குட்டி தீவுகள் இருக்கிறதாம். அதில் ஒரு தீவை தேர்ந்தெடுத்து மிகப்பெரிய வள்ளுவர் சிலையையும் அங்கே நிர்மாணித்திருக்கிறார் படப்பிடிப்புக்காக. மீதியுள்ள பத்து சதவீத படப்பிடிப்பு விருதுநகர் அருகில் உள்ள கிராமத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஹீரோவாக நடித்திருக்கும் வசந்த், மற்றும் அவரது நண்பர்களாக நடித்திருக்கும் சிந்துராஜ், ரவிஷங்கர் ஆகியோர் டென்மார்க்கை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள் பூர்ணிதா, சுஜிபாலா ஆகியோர். காமெடிக்கு கருணாசும், வில்லனாக ஸ்ரீமனும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு கிச்சாஸ், நடனம் காதல் கந்தாஸ், சண்டைப்பயிற்சி அனல் அரசு, எடிட்டிங் சதீஷ் குரோசோவா என்று முக்கிய தொழில் நுட்ப கலைஞர்களை தமிழகத்திலிருந்து தேர்வு செய்திருக்கும் துரை, ஜுன் மாதம் இளம் புயலை வெளியிடும் முடிவில் இருக்கிறார். கதை, திரைக்கதை, பாடல்கள், இயக்கம் என்று நான்கு வேலைகளை ஏற்றுக் கொண்டிருக்கும் துரை, நான்கு திசைகளில் மட்டுமல்ல... எட்டு திசைகளும் பேசப்படுகிற ஒரு இயக்குனராக வர வாழ்த்துவோமே!