ரஜினியும், இளையராஜாவும் சந்தித்து மணிக்கணக்காக பேசியதுதான் இப்போதைக்கு சுட சுட உலவும் கோலிவுட் செய்தி. மாதத்திற்கு இரண்டு முறையாவது சந்தித்து பேசுவது இருவருக்கும் வழக்கம் என்றாலும், இந்த சந்திப்பிற்கு மட்டும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து விவாதிக்கிறது கோடம்பாக்கம்!
ஏன்? ரஜினியிடம் எப்படியாவது கால்ஷீட் வாங்கிவிடுவது என்று மல்லுகட்டும் பழைய தயாரிப்பாளர்களின் ஓட்டப்பந்தயத்தில் சத்தம்போடாமல் உள்ளே புகுந்திருக்கிறார் இளையராஜா. கடந்த ஒரு வருடமாகவே சொந்தப்படம் எடுக்க திட்டமிட்டு வருகிறார் ராஜா. இதற்கிடையில், அப்பாவின் ஆசையோ, சொந்த விருப்பமோ, படத்தயாரிப்பில் இறங்கிவிட்டார் யுவன்சங்கர்ராஜா. முற்றிலும் புது முகங்களை வைத்து இவர் தயாரிக்கும் படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில்தான் ரஜினியும், ராஜாவும் சந்தித்துக் கொண்ட விஷயத்திற்கு இப்படியும் சில முடிச்சுகளை போடுகிறார்கள் கோலிவுட்டில். ஆன்மீகத்தில் இருவருமே ஒருதுருவ சிந்தனையாளர்கள் என்பதால் யார் கனவில், எந்த சாமி வந்து இந்த கட்டளையை இட்டதோ? செய்தி உண்மையாக இருக்கிற பட்சத்தில், பக்தி பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது!
கூடவே இன்னொரு செய்தியையும் காதில் போட்டுக் கொள்ளுங்கள்.. அஜய்தேவ்கான் நடித்த இந்தி படமான 'ஹல்லா போல்' கதையை தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறது பிரமிட் சாய்மீரா நிறுவனம். இதற்காக ரஜினியிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்களாம். இதை முன்னிட்டு ரஜினி மேற்படி படத்தை பார்த்துவிட்டார் என்றும், இல்லையில்லை இன்னும் பார்க்கவில்லை என்றும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிமிடம் வரைக்கும் ரஜினியின் அடுத்த பட லிஸ்டில் இந்த படத்தையும் சேர்த்துக் கொள்வோமே! காசா? பணமா? ச்சும்மா பேச்சுக்குதானே?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment