Monday, November 12, 2007

நல்ல படம் பார்க்கலைன்னா உதைப்போம்! -சினிமா ரசிகர்களுக்கு தங்கர்ப்பச்சான் எச்சரிக்கை

தி.நகரில் அமைந்திருக்கும் கர்நாடக சபாவில் தன்னுடைய ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தினார் தங்கர்பச்சான். பாரதிராஜா, மணிரத்னம், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் விஜய் உள்ளிட்ட பலர் மேடையில் அமர்ந்திருக்க, ஞாயிற்றுக்கிழமையின் அந்த காலைப்பொழுது தமிழ்சினிமாவின் கம்பீரத்திற்கு பொலிவு சேர்த்தது.

தங்கர் பற்றி பேசிய எல்லாரும், அவர் வெளிப்படையான மனிதர். கொஞ்சம் வாய் ஜாஸ்தி என்றே விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு தகுதியானவர்தான் என்பது போல் அமைந்திருந்தன திரையிடப்பட்ட ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் மூன்று பாடல்கள். 'மார்கழியில் குளிச்சுப்பாரு, குளிரு பழகி போகும்... மாதவரா இருந்து பாரு, வறுமை பழகி போகும்' என்ற வைரமுத்துவின் பாடல் வரிகளும், அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்திருந்த தங்கரின் ஆற்றலும் பிரமிக்க வைத்தது அனைவரையும்.

கலகலப்புக்கும் பஞ்சமில்லை, சலசலப்புக்கும் குறைச்சலில்லை இந்த விழாவில்! பிரபுதேவா பேசியதுதான் கலகலப்பு. நாங்கள்ளலாம் அவரை டக்கர்ன்னுதான் கூப்புடுவோம். எங்காவது லொகேஷன் பார்க்க காரில் ஒண்ணா கிளம்புவோம். திடீர்னு ஒரு மாட்டை பார்த்துட்டு அந்த மாடு பாருங்க. எவ்வளவு அழகா நடந்து போவுதும்பாரு. புல்லை பார்த்துட்டு இந்த புல் எப்படி வளர்ந்திருக்கு பாருங்கம்பாரு. அரைமணிநேரம் ஆளை காணுமேன்னு பார்த்தா எங்காவது சாணி பக்கமா உட்கார்ந்திருப்பாரு. இங்க பாருங்க... மாடு எவ்வளவு அழகா சாணி போட்டிருக்கும்பாரு. இரண்டு நாளுக்கு முன்னாடி இந்த விழாவுக்கு வரச்சொல்லி போன் பண்ணினாரு. நான் உடனே சரின்னு சொல்லிட்டேன். இல்லைன்னா, ஆனந்த விகடனிலோ, குமுதத்திலோ பிரபு ஏன் விழாவுக்கு வரலை தெரியமான்னு ஒரு பேட்டி கொடுப்பாரு என்று சொல்ல, கைதட்டல் அரங்கத்தை அதிர வைத்தது.

வழக்கம்போல் சலசலப்பு தங்கரின் பேச்சுக்குதான்! படத்தை பற்றி பேசிக்கொண்டேயிருந்தவர், நல்ல படங்கள் எடுக்கறதே கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுகிட்டு வருது. நம்ப மண்ணை பற்றி படம் எடுக்காம எதை எதையோ எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. பாரதிராஜா படத்தை கூட நான் ஒரு கட்டத்திலே பார்க்கறதை நிறுத்திட்டேன். காரணம், அவரு மண்வாசனையை விட்டு விலகி போயிட்டாரு. (இத்தனைக்கும் மேடையில் பாரதிராஜாவும் உட்கார்ந்திருந்தார்) இனிமே மக்கள் நல்ல படத்தைதான் பார்க்கணும். இல்லைன்னா நானும் சீமானும் நல்ல படங்களை பார்க்க சொல்லி அடிப்போம் என்று ஆவேசப்பட்டார். திடீரென்று சீமான் பக்கம் திரும்பி, இதெல்லாம் வேணாம்டா சீமான். நாம கிளம்பி போயிடலாம்டா. நமக்கு வேற வேலை இருக்கு என்று சீறினார். 'இப்போ ஒரு தியேட்டரில் படுத்துக் கொண்டே படம் பார்க்கலாம்னு ஒரு வசதியை கொண்டு வந்திருக்காங்களாம். நல்லவேளை அதோடு விட்டாங்களே...' என்று ஆரம்பித்து, 'அதை என் வாயாலே எப்படி சொல்றது?' என்று அபிராமி தியேட்டரையும் ஒரு பிடி பிடித்தார்.

விஜயின் பேச்சுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். தங்கர்பச்சான் இயக்கத்தில் நான் ஒரு படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். அவருடைய கிராமத்து ஸ்டைலில், என்னுடைய பாணியும் இணைந்து இருந்தால் நிச்சயம் நான் நடிப்பேன் என்று அவர் சொல்ல, தங்கரின் முகத்தில் ஓராயிரம் மின்னல்கள்! தன்னுடைய ஏற்புரையில் இதை குறிப்பிட்ட தங்கர், நிச்சயம் விஜய்க்கு ஏற்றது மாதிரி ஒரு கதையை தயார் செய்து கொண்டுதான் அவரிடம் கதை சொல்லப்போவேன். அப்படி ஒரு கதை அமையாவிட்டால் அந்த திசைக்கே போக மாட்டேன் என்று உறுதியளித்தார்.

தமிழ்சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில ஜாம்பவான்கள் இருந்திருக்கிறார்கள். ஸ்ரீதர், மகேந்திரன், பாரதிராஜா, பாலசந்தர், பாக்யராஜ் போன்றவர்களை சொல்லலாம். ஆனால் இப்போது அப்படியல்ல, ஒரு படையே இருக்கிறது. அதில் தங்கர்பச்சான் முன்னணியில் இருக்கிறார் என்று மணிரத்னம் வாழ்த்தி அமர்ந்தார்.

நான் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் என்னை கவர்ந்த பாடல் இது என்று மூன்று பாடல்களை பட்டியலிட்டார் கவிப்பேரரசு வைரமுத்து. ஆயிரம் தாமரை மொட்டுகளே, உயிரே உயிரே, என்ன சத்தம் இந்த நேரம்... இவற்றோடு நான்காவது பாடலாக நான் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் பாடலையும் சேர்த்துக் கொள்கிறேன். நான் எழுதிய வரிகளை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் தங்கர்பச்சான் என்றார். 'பிரபுதேவா பேசும்போது தங்கரை மண் என்றும் சாணி பக்கத்தில் அமர்ந்திருந்தார் என்றும் சொன்னார். மண்ணுக்கு சாணிதான் உரம்' என்று வைரமுத்து சொல்ல, கைதட்டல்களால் அதிர்ந்தது அரங்கம்!

மூன்று முறை ஊர்வசி விருது வாங்கிய அர்ச்சனா, உள்ளாடைகள் தெரிய புடவை கட்டி வந்திருந்ததுதான் பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது ரசிகர்களை!

No comments: