
கும்பகோணம்: வல்லமை தாராயோ பட துவக்க விழாவில் மேடையில் அமர்ந்திருந்த குஷ்பு கடவுளை அவமதித்து விட்டதாக இந்து முன்னணி அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
சர்ச்சைகளுக்கும் குஷ்புவுக்கு நெருங்கிய தொடர்புண்டு. தற்போது கும்பகோணம் நகர இந்து முன்னணியினர் கடவுளை அவமதித்ததாக குஷ்பு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக அந்நகர இந்து முன்னணி பொதுச் செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது,
நடிகர் பார்த்திபன் நடிக்கும் வல்லமை தாராயோ என்ற புதிய படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் எழுத்தாளர் சிவசங்கரி, ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பட பூஜையின்போது விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முப்பெரும் தேவியரின் சிலை அருகே போடப்பட்டிருந்த இருக்கையில் குஷ்பு அமர்ந்திருந்தார். அப்போது அவர் கால்மேல் கால் போட்டுக்கொண்டு செருப்பு காலுடன் சாமி சிலையை நோக்கி ஆட்டியபடி இருந்தார்.
இதன் மூலம் இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலும், இந்து மக்களை புண்படுத்தும் விதத்திலும் நடிகை குஷ்பு நடந்து கொண்டார். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதுகுறித்து ராம்நகர் குருமூர்த்தி கூறுகையில்,
பெண்களின் கற்பு பற்றி பேசிய குஷ்பு தற்போது இந்துக்கள் வழிபடும் முப்பெருந்தேவியர் சிலையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். இது இந்துக்களை மிகவும் புண்படுத்திவிட்டது.
வல்லமை தாராயோ பட பூஜை நிகழ்ச்சியை பல தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் குஷ்பு இவ்வாறு நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கதாகும்.
இந்த காட்சியை தொலைக்காட்சியில் கண்ட போது எனது மனம் மிகவும் வேதனை அடைந்தது. மேலும் இந்த பூஜை நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இன்டர்நெட்டிலும் வெளியிடப்பட்டுள்ளன.
குஷ்புவின் இந்த கடவுள் அவமதிப்பு காட்சியை தொலைக்காட்சியிலும், இன்டர் நெட்டிலும் ஏராளமானோர் பார்த்துள்ளனர். இது குறித்து குஷ்புவிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment