Tuesday, November 27, 2007

எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு! -சம்பளம் வாங்காமல் நடிக்க சத்யராஜ் தயார்!


நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணியை பார்த்தோம் திரையில். அதே நக்கல், அதே அலட்சியம், கவுண்டருக்கு உடல்தான் கொஞ்சம் இளைத்திருக்கிறது. மற்றபடி, மில்லி மீட்டர் அளவுகூட குறையவில்லை அவரது நையாண்டி!

கவுண்டரண்ணன் கூட சேர்ந்தா கரைச்சல்தான்! ஜாலியா, பொழுதுபோக்கா இந்த படத்தை கொடுக்கணும்னு முடிவு பண்ணியவுடனே நானும், டைரக்டர் கிச்சாவும் நினைச்சது கவுண்டரண்ணனைதான்! தன்னுடைய அடுத்த படமான 'தங்கம்' பற்றி பேசும்போது கவுண்டரை பற்றிதான் அதிகம் பேசுகிறார் சத்யராஜ். பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்கள் சத்யராஜின் லொள்ளு இமேஜை மறக்கடிக்கிற நேரத்தில், 'தங்கம்' வந்து அந்த இமேஜுக்கு மறுபடியும் உயிர் கொடுக்கும் போலிருக்கிறது.

'பெரியார்' வெளியான நேரத்தில் இனிமேல் பழைய சத்யராஜை பார்க்க எனக்கே கூச்சமாக இருக்கிறது என்றார் சத்யராஜ். ஆனால், பெரியார் படப் புகழ் மறையவே இல்லை. அதற்குள் தங்கம் மாதிரி படங்கள்! ஏன் சார்? என்றால், 'என்னங்க... கவுக்கிறீங்களே' என்று பேச ஆரம்பிக்கிறார் சத்யராஜ். 'ஒரு நடிகன்ங்கிறவன் எந்த மாதிரி ரோல் கொடுத்தாலும் நடிக்கணும். அது மட்டுமில்லாம, சிவாஜி, கமல் போன்ற ஹீரோக்கள் கூட, சீரியசா ஒரு படம் பண்ணிட்டு, பொழுதுபோக்கா அடுத்த படம் பண்ணியிருக்காங்க. கமல் சார் 16 வயதினிலே நடிச்ச நேரத்திலேதான் குரு என்ற கமர்ஷியல் படம் வந்தது. அப்படியிருக்க, ஒரேமாதிரி நான் நடிச்சிட்டு இருந்தா போரடிச்சிடுமே? இரண்டும் கலந்துதான் பண்ணுவேன்!'

தங்கம் படத்தில் ஒரு காட்சியில் 'பூமழை தூவி' என்ற எம்.ஜி.ஆர் பாடலுக்கு அவரை போலவே நடித்திருக்கிறார் சத்யராஜ். இதற்காக எம்.ஜி.ஆரின் மேக்கப்மேனிடம் கேட்டு, அவர் யூஸ் பண்ணிய முகப்பவுடரையே பயன்படுத்தினார்களாம். அச்சு அசலாக எம்.ஜி.ஆர் மாதிரியே தோற்றமளித்தார் சத்யராஜ். 'பெரியார் படத்தை பார்த்துவிட்டு அப்படியே அவர் மாதிரியே இருக்கீங்க என்று பாராட்டினார்கள். இந்த பாடலை பார்த்த நீங்களும் எம்.ஜி.ஆர் மாதிரியே இருக்கறதா சொல்றீங்க. இந்த பெருமை யாருக்கு சார் கிடைக்கும்?' நெகிழ்கிற சத்யராஜிடம், 'எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை படமா எடுத்தா சம்பளம் வாங்காம நடிப்பீங்களா?' என்று கேட்டதுதான் தாமதம். 'அவர் மாதிரி நடிக்கிற வாய்ப்பு கிடைக்கறதே மிகப்பெரிய சம்பளம். யார் எடுக்க முன் வந்தாலும் என் கால்ஷீட் ரெடி' என்கிறார் முகமெல்லாம் பூரிப்பாக!

சத்யராஜை, எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தாராளமாக கொண்டாடலாம், 'எங்கள் தங்கம்' என்று!

No comments: