மூன்று தலைமுறை இயக்குனர்களையும் மேடையேற்றி தன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையே, வெற்றி விழாவை போல நடத்தினார் ஷங்கர். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான 'கல்லூரி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இத்தனை பரபரப்பும்!
பாரதிராஜா துவங்கி... வெங்கட்பிரபு வரை, மேடை கொள்ளாத இயக்குனர்கள்! அபூர்வமாக கலந்து கொண்டார்கள் மணிரத்னமும், ஏ.ஆர்.ரஹ்மானும்! 'வழக்கமா சிறையிலிருந்து கைதிகளைதான் விடுதலை செய்வாங்க. ஆனா சமீபத்தில், ஒரு சிறையையே கைதிகளிடமிருந்து விடுதலை செஞ்சுருக்காங்க...' பார்த்திபனின் தொகுப்புரைக்கு வரிக்கு வரி கிளாப்ஸ் அடித்தது கூட்டம். படத்தின் பெயர் கல்லூரி என்பதால், விழாவுக்கு வந்திருந்த வி.ஐ.பி களின் கல்லூரி வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்களை சொல்லி, குறிப்பிட்ட அந்த வி.ஐ.பி களையே திணறடித்தார் பார்த்திபன்.
கிராமிய பண்பாட்டுத்துறை 'ஹெச் ஓ டி' என்று தங்கர்பச்சானை பார்த்திபன் மேடைக்கு அழைக்க, தனக்கேயுரிய தடாலடி பேச்சால் மிரள வைத்தார் தங்கர். தயாரிப்பாளர்களின் நிலைமை இன்னிக்கு ரொம்ப மோசமா இருக்கு. ஒரு படம் எடுப்பதோடு சரி, பல தயாரிப்பாளர்கள் காணாமல் போயிடுறாங்க. கருப்பு பணம் இருக்கறதாலதான் இத்தனை படங்கள் தமிழில் வருது. அப்படியில்லைன்னா வருடத்திற்கு இரண்டு படம் கூட வராது என்று அவர் சொல்ல, மேடையிலிருந்த முக்கால்வாசி இயக்குனர்கள் முகத்தில் அதிர்ச்சி. அந்த மேடையிலேயே, ஷங்கரின் தயாரிப்பில் தனக்கும் ஒரு படம் இயக்குகிற வாய்ப்பு வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சமீபத்தில் நடைபெற்றுவரும் எல்லா திரைப்பட விழாக்களிலும் கலந்து கொள்கிறார் பாலுமகேந்திரா. தமிழ்த்தாய் வாழ்த்தை ஏ.ஆர்.ரஹ்மான் தன் இசையில் மறுபதிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொள்ள, அதை ஆமோதித்து ஆரவாரம் செய்தது கூட்டம்!
எல்லாருக்கும் கல்லூரி வந்த பிறகுதான் காதல் வரும். ஆனால் பாலாஜிக்கு காதல் வந்தபிறகு கல்லூரி வருகிறது என்று ராதாமோகன் பேச, பார்த்திபனே 'ஜெர்க்' ஆனார்.
கல்லூரி வாசலையே மிதிக்கவில்லை என்று வருந்திய பாரதிராஜா, தன்னுடைய சிறு வயது காதலையும் அசைபோட்டார். காதல் படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு போன பிறகும், பேச வராமல் அதிர்ந்து போயிருந்ததை குறிப்பிட்டவர், பருத்திவீரன், வெயில் இயக்குனர்களையும் பாராட்டினார். இவங்கள்ளாம் என்னை தூங்கவிடாம செஞ்சுட்டாங்க என்று அவர் சொல்ல சொல்ல, சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் முகத்தில் வழிந்தோடியது பெருமிதம்.
ராம் படத்தின் ஆடியோவை விற்பதற்கு நான் படாதபாடு பட்டேன். சினிமா வியாபாரத்தில் இன்னமும் புரியாமலிருப்பது இரண்டு ஏரியாதான். ஒன்று இந்த ஆடியோ, மற்றொன்று வெளிநாட்டு உரிமை. என்னுடைய யோகி படத்தின் ஆடியோவை நீங்களே இலவசமாக வெளியிடணும் என்றார் அமீர். (ஷங்கர் தன் 'கல்லூரி' படத்தின் ஆடியோவை புதிதாக தொடங்கியிருக்கும் 'எஸ் மியூசிக்' என்ற நிறுவனத்தின் மூலமாகதான் வெளியிடுகிறார்)
இத்தனைபேர் இங்கே மேடையில் ஒன்றாக இருப்பது ஆச்சர்யம். மும்பையிலே இருந்து அவங்களை கொண்டு வந்து இந்த மேடையை காட்டணும் என்றார் மணிரத்னம். 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொள்ளும் ஏ.ஆர்.ரஹ்மான் கூட, சில நிமிடங்கள் தன் உரையை நீட்டித்தது ஆச்சர்யம். காதல் படத்தை நான் இன்னும் பார்க்கலை. இன்னும் இரண்டு நாட்களில் எப்படியாவது பார்த்திடறேன் என்றார்.
எல்லாருடைய பெயரையும் எழுதி வைத்துக் கொண்டு தனித்தனியாக நன்றி சொன்னார் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர். முடிவாக பேசிய கல்லூரி படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல், இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் ஷங்கருக்கு எல்லாரும் எழுந்து நின்று கைதட்டணும் என்று கேட்டுக் கொண்டார்.
நல்லவேளை... பெஞ்ச் மேல எழுந்து நின்று கை தட்டணும் என்று சொல்லாமல் விட்டாரே...!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment