Tuesday, November 27, 2007

பாரதி திருத்திய கவிதை! -'வல்லமை தாராயோ' விழாவில் பாலுமகேந்திரா!



எல்லா மதமும் நல்லதுக்குதான், தா'மதம்' உட்பட! -இப்படி \பேசிய நபர் இயக்குனரல்ல... ஒரு தயாரிப்பாளர். பெயர் சுந்தரராமன். இந்தோனேஷியாவில் நிலக்கரி சுரங்கம் வைத்திருக்கிறாராம். 'தீபாவளி சமயத்தில் நிறைய பட்டாசுகள் வெடிப்பேன். எங்கப்பா கேப்பாரு, ஏண்டா இப்படி காசை கரியாக்குறே என்று! இப்போ இந்தோனேஷியாவுல கரியை காசாக்கிட்டு இருக்கேன்!' சரமாரியாக வந்து விழுகிறது சிலேடைகள். இனம் இனத்தோடு சேரும் என்பது மாதிரி இவருடைய தயாரிப்பில் நடிக்கவிருப்பவர் பார்த்திபன். 'வல்லமை தாராயோ' என்ற பாரதியின் வரியை தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் மதுமிதா. இவர் சுந்தரராமனின் மகள்.

பாட்டிமார்கள் பக்கத்தில் இருந்தால் சுற்றிப்போட சொல்வார்கள். அப்படியொரு அழகான குடும்பம். அசத்தலான விழா. வல்லமை தாராயோ படத்தின் துவக்கவிழாவே படம் பார்ப்பது மாதிரி இருந்தது. அத்தனை சுவாரஸ்யம்! சாதனைப் பெண்களில் சிலரை மேடையில் ஏற்றி பேச வைத்தார்கள். எழுத்தாளர் சிவசங்கரி, டி.ஜி.பி.திலகவதி, டாக்டர் கமலா செல்வராஜ், வழக்கறிஞர் சுமதி, நடிகை குஷ்பு, இயக்குனர் ப்ரியா என்று சக்திகளின் சங்கமமாக இருந்தது அந்த மேடை!

ஒரு கோவிலை போல அமைக்கப்பட்டிருந்த மேடையில் திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள துர்கா, மஹாலட்சுமி, சரஸ்வதி சிலைகளும் அமைக்கப்பட்டிருந்தன. முன்னதாக மேடையேறினார்கள் ஆண் சாதனையாளர்கள்! தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இராம.நாராயணன் பேசும்போது, 'நான் மாதத்திற்கு ஒரு முறை திருநாகேஸ்வரம் போய் இறைவனை வணங்கி வருகிற வழக்கம் உள்ளவன். கடந்த சில மாதங்களாக போக முடியவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த திருநாகேஸ்வரத்தையே இங்கு வரவழைத்துவிட்டார் தயாரிப்பாளர். அவருக்கு என் நன்றி' என்றார் மனப்பூர்வமாக!

'பாரதி வாழ்ந்த வீட்டிற்கு போக வேண்டும் என்று தோன்றியது. பாண்டிச்சேரிக்கு போயிருந்தேன். அங்கே அவர் கைப்பட எழுதிய கவிதைகளில் சிலவற்றை வைத்திருந்தார்கள். 'வல்லமை தாராயோ', இந்த மானுடம் புகழுற வாழ்வதற்கே' என்றுதான் அவர் முதலில் எழுதியிருக்கிறார். அதை அடித்துவிட்டுதான் அதன் மேலேயே 'இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே' என்று திருத்தியிருக்கிறார்' என்று பாரதியின் கவிதை பற்றி புது தகவல் ஒன்றை கூறினார் பாலுமகேந்திரா.

சிவசங்கரியின் பேச்சு அர்த்தம் நிரம்பியதாக இருந்தது. பிரம்மா-சரஸ்வதி, விஷ்ணு-மஹாலட்சுமி, சிவன்-பார்வதி ஜோடிகளுக்கான காரணம் குறித்து அவர் விவரித்தபோது, இத்தனை விஷயம் இருக்கிறதா இதற்குள் என்ற பிரமிப்பே எழுந்தது.

குஷ்பு பேசும்போது, 'பெண் டைரக்டர்கள் படம் எடுத்தால், பெண்கள் பிரச்சனையை மையமாக வைத்துதான் எடுப்பார்கள் என்ற கருத்தை பானுமதி போன்றவர்கள் அந்த காலத்திலேயே மாற்றிக் காட்டினார்கள். பொழுதுபோக்கு அம்சத்துடன் பெண் டைரக்டர்களால் படம் கொடுக்க முடியும் என்பதற்கு ப்ரியா இயக்கிய கண்ணாமூச்சி ஏனடா ஒரு உதாரணம்' என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் பிறந்து, இந்தோனேஷியாவில் வளர்ந்து, சிங்கப்பூரில் படித்து, ஹாலிவுட்டில் குறும்படங்களை இயக்கி, கோடம்பாக்கத்தில் சங்கமம் ஆகியிருக்கிறார் மதுமிதா. இவர் இயக்கிய ஹாலிவுட் படங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கிறது. 'வல்லமை தாராயோ' கலைப்படைப்பாக மட்டுமே உருவாகாமல் கமர்ஷியலாகவும் ஹிட் ஆகவேண்டும். இதுவரை வருமானம் கொடுத்த இந்தோனேஷிய நிலக்கரி, எங்க ஊரு தியேட்டரில் கலர் கலராக ஜொலித்து காசுமழை பொழியணும்!

1 comment:

இரமணன் said...

வணக்கம்
உங்கள் கட்டுரைகளும் ஆக்கங்களும் என்னை உங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.
வாழ்த்துக்கள்

முதலில் என்னை பற்றிய ஒர் சிறிய அறிமுகம்.

எனது பெயர் இரமணன் நான் ஒரு இணைய தள வடிவமைப்பாளராக பணி புரிகிறேன். உயிர் வாழ்வதற்க்காக சொந்த மண்ணை விட்டு அந்நிய மண்ணிலே செத்துக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான கோழைகளில் நானும் ஒருவன்.

நான் தற்பொழுது ஓர் சிறிய முயற்ச்சியில் இறங்கியுள்ளேன். அதை உங்களிடம் பகிர்து கொள்ள விரும்ப்புகிறேன்.

இன்று இணையதில் நிறைய தமிழ் சார்ந்த விடயங்கள் இருக்கின்றன இது தமிழ் வளர்ச்சியில் மிகவும் வரவேற்க்க தக்கது ஆனால் இதில் வருந்த தக்க விடயம் என்ன வென்றால் இந்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் போய் சேராதது தான். இதற்க்காகவே நான் ஓர் இணைய தளத்தை ஆரம்பித்து உள்ளேன். இதில் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழ் சார்ந்த தகவல்களையும் திரட்டி ஓர் இடத்தில் பதித்து வருகிறேன். இதில் உங்கள் கட்டுரைகளையும் ஆக்கங்களையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அதற்க்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தகவல்கள் அனைதும் உங்கள் பெயரிலேயே பதியப்படும்.

தமிழ் அமுதினைத் திரட்டிவரும் இந்த தேனிக்கு தங்கள் உதவியை வழங்குங்கள். நாளைய எமது தமிழ் சமுதாயம் இணையத்தில் நடை போட இது வழி சமைக்கும் என்று நம்புகிறேன்

நன்றி
இரமணன்
www.thurikai.com