Tuesday, November 27, 2007

நான் ஒரு தனிமை விரும்பி! -அஜீத்தின் அல்டிமேட் பேட்ட


பல வருடங்களுக்கு பிறகு மறுபடியும் அதே பழைய அஜீத்தை பார்க்க முடிந்தது. தோற்றத்தில்தான் இந்த பொலிவே தவிர, பேச்சில் அளவுக்கதிகமான நிதானம்! வார்த்தைக்கு வார்த்தை நான் ஒரு தனிமை விரும்பி என்கிறார். பில்லா படத்தையொட்டி அவர் ஏற்பாடு செய்திருந்த பிரஸ்மீட்டில், நிருபர்கள் எழுப்பிய சரமாரி கேள்விகளுக்கு அளவுக்கு மீறிய பொறுமையோடு பதில் சொன்னார் அஜீத். இதுவரைக்கும் நான் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருக்கு. சுமாரா ஓடியிருக்கு. பிளாப் கூட ஆகியிருக்கு. ஆனா எப்பவுமே என்னுடைய படத்திற்கு நானே 100-வது நாள் போஸ்டர் அடிச்சுக்கிட்டதில்லை. மக்களை ஏமாத்த முடியாது. என்னை பொறுத்தவரை நேர்மையா, பொய் சொல்லாம நடந்திட்டு இருக்கேன்! விட்டால், அஜீத்தானந்தாவாக மாறி, போதிக்கிற அளவுக்கு பேசுவார் போலிருக்கிறது.

நானும் விஜயும் எதிரிகள் இல்லையே என்று தன் வாயலாலேயே சொல்கிற அளவுக்கு பக்குவப்பட்டிருக்கிறார் அஜீத். விஜய் சாரும் நானும் ஏற்கனவே ராஜாவின் பார்வையிலே படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறோம். நாங்கள் இருவரும் எதிரிகள் கிடையாது. எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நிச்சயம் இருக்கிறது. இருவருக்குமே தனித்தனி மார்க்கெட் இருக்கிறது. நாங்கள் தனித்தனியாக நடிக்கும்போது அதிகம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இருவரும் சேர்ந்து நடித்தால் பலருக்கு வேலை குறைந்து போகும். அதனால் இப்போதைக்கு சேர்ந்து நடிக்கிற எண்ணமில்லை. மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும்போது என்னால் சவுகரியமாக உணரவும் முடியாது. ஒருவேளை ஷோலே போல் கதைகள் அமைந்தால் நடிக்கலாம்! விஜய் பற்றிய தனது பகிர்தலை அதோடு நிறுத்திக் கொள்கிறார் அஜீத்.

எந்த ஹீரோவும் சொல்ல துணியாத இன்னொரு கருத்தையும் சொன்னார். ரசிகர்கள் தங்கள் நேரத்தை வேஸ்ட் பண்ண கூடாது. இளமை இருக்கும்போதே உழைத்து முன்னேற வேண்டும் அஜீத்தின் இந்த பிராக்டிகலான பேச்சு சிலருக்கு பிடிக்கிறதோ, இல்லையோ? அஜீத்தை உணர்ந்த அவரது உண்மையான ரசிகர்களுக்கு பிடிக்கும்!

தற்போது ரிலீஸ் ஆகவிருக்கும் பில்லா பற்றியே அதிகம் பேச விரும்பினார் அஜீத். கல்யாண வீட்டில் சங்கு ஊதிய கதையாக அங்கே ஒரு நிருபர் செக்ஸ் எஜுக்கேஷன் பற்றி என்ன நினைக்கிறீங்க? என்று கேட்க, ஸாரி...நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டு அடுத்த கேள்விகளை எதிர்கொண்டார் அஜீத்.

No comments: