Tuesday, November 27, 2007

பிரதமருக்கு விஜயகாந்த் தந்தி

மலேசியாவில் உள்ள தமிழ்மக்கள் மனிதர்களாக வாழவும், சம உரிமையும் சமவாய்ப்பும் பெறவும் மலேசியா அரசு நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் வற்புறுத்த வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரதமர் மன்மோகன்சிங்கிற்குத் தந்தி அனுப்பியுள்ளார். இதே செய்தியைப் பிரதமருக்குக் கடிதம் மூலமும் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் விஜயகாந்த் கூறியிருப்பதாவது:

மலேசியாவில் உரிமை கேட்டுப் போராடிய தமிழ் மக்கள் மீது மலேசிய அரசு தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் அவர்களைக் கட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளது. இது கண்டிக்கதக்கது மட்டுமல்ல, சிறிதும் மனிதாபிமானம் அற்ற செயலாகும்.

மலேசியாவில் உள்ள தமிழ்மக்கள் மனிதர்களாக வாழவும், சம உரிமையும் சமவாய்ப்பும் பெறவும் மலேசியா அரசு நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் வற்புறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவும், கைது செய்துள்ளவர்களை விடுவிக்கவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும் இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சிறு பொறியாகத் தோன்றியது, எவ்வாறு இன்று இலங்கையில் காட்டுத் தீயாக மாறி உள்ளதோ அதைப் போல மலேசியாவும் ஆகாமல் இருக்க மத்திய அரசு தனது மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டுவது அவசியம், குறிப்பாக இந்தியப் பிரதமர், இது சம்பந்தமாக நான் அனுப்பி உள்ள தந்தியையும் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

No comments: