Sunday, November 18, 2007

தலை நிறைய மல்லிகைப்பூ, தழைய தழைய காஞ்சிபுரம் புடவை! -ப்ரியாமணியின் புதிய சந்தோஷம்!

சினிமாவில் மட்டுமல்ல. பொதுவிழாக்களில் கூட புடவைக்கு விடை கொடுத்துவிட்டார் ப்ரியாமணி. காரணம்... புடவை, தாவணி என்று மறுபடியும் கிராமத்து வேடம் கட்ட யாராவது அழைத்துவிட்டால் என்னாவது என்ற பயம்தான். ஆனால் நீண்டநாள் கழித்து புடவை கட்ட போகிறாராம். (அட.. பொம்பளைங்க புடவை கட்டுறதெல்லாம் ஒரு நியூசா?)

கோவாவில் நடைபெற இருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் குத்துவிளக்கு ஏற்றப்போகிற பெருமை ப்ரியாமணிக்கு கிடைத்திருக்கிறது. இது அவருக்கு சந்தோஷம் என்றால், கூடுதல் சந்தோஷம் இன்னொன்று! இவரின் கனவு நாயகன் ஷாரூக்கான் அந்த விழாவை துவங்கி வைக்க போகிறார். முதலில் தர்மேந்திரா, ரஜினி இருவரில் ஒருவர் துவங்கி வைப்பதாக இருந்த விழாவில் இருவருமே வர தயங்கியதால், ஷாரூக்கை அழைத்திருக்கிறார்கள்.

'தலைநிறைய மல்லிகைப்பூ, தழைய தழைய காஞ்சிபுரம் புடவை இந்த தோற்றத்தில் ஷாருக் பக்கத்தில் நான் நிற்பதை நினைத்தாலே புல்லரிக்குது' என்கிறார் ப்ரியாமணி. எந்த நடிகைக்கு புடவை கட்டினாலும், அரிக்கதான் செய்கிறது! என்ன செய்ய?

கோவிலுக்குள் கதை சொன்னேன்! -இளையராஜாவும், ஒரு இயக்குனரும்!


தமிழில் டைட்டில் வைக்கிறேன் பேர்வழி என்று எதையெதையோ வைக்கிற இயக்குனர்களுக்கு மத்தியில் நல்ல தமிழில் பெயர் வைத்திருக்கிறார் கே.சந்தர்நாத். கண்களும் கவி பாடுதே! இதுதான் இவர் இயக்கி வரும் படத்தின் பெயர். சுமார் 30 படங்களுக்கு மேல் பி.வாசுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சந்தர்நாத்துக்கு இந்தப்படத்தின் கதை மேல் இருக்கிற நம்பிக்கைக்கு இணையாக இசைஞானி இளையராஜாவின் இசைமேல் நம்பிக்கை இருக்கிறது.

இளையராஜாவுடன் மூகாம்பிகை கோவிலுக்கு போயிருந்தோம். அங்கே பிரகாரத்தில் அமர்ந்திருக்கும்போது கதையை சொல்ல சொன்னார் ராஜா. நான் எந்த கதையை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவருடன் போயிருந்தேனோ, அந்த நேரத்தில் அந்த கதையை சொல்லாமல் என்னையறியாமல் வேறு கதையை சொல்ல ஆரம்பித்தது என் மனம்.

அந்த கதையைதான் இப்போது படமாக்கிக் கொண்டிருக்கிறேன் என்றார் சந்தர். காரைக்காலை சுற்றிதான் முழு படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறார்கள். உலகம் முழுக்க சுற்றுவதெல்லாம் வேஸ்ட். உங்களுக்கு என்ன மாதிரி லொகேஷன் வேண்டுமென்றாலும், அது காரைக்காலில் இருக்கிறது என்கிறார். மூன்று ஹீரோக்களையும், மூன்று ஹீரோயின்களையும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் சந்தர். எல்லாம் புதுசாக இருந்தாலும், ராஜா இசை இருக்கிறதே... அது எல்லாரையும் தியேட்டருக்குள் இழுக்கும் என்கிறார் நம்பிக்கையுடன்.

கட்டுமான தொழில் செய்பவர்கள்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள். கலவையை சரியாத்தான் போட்டிருக்காங்க!

தினந்தோறும் மீன் குழம்பு விருந்து -நாயகர் வலையில் விழுந்த நாயகி


அவதார புருஷரின் படம் நாளுக்கு நாள் பரபரப்பாக வளர்ந்து வருகிறது. பல கோடிகளில் உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தை பார்ப்பதற்கு தமிழ்நாட்டில் அத்தனை வி.வி.ஐ.பி களும் துடித்துக் கொண்டிருக்க, முக்கியமான இருவருக்கு மட்டும் சில காட்சிகளை போட்டு காட்டியிருக்கிறார்கள்.

பார்த்த இருவருமே வாயடைத்து போனார்களாம். இப்படி வி.வி.ஐ.பி களை வாயடைக்க வைத்த அவதாரபுருஷர், இன்னொரு விஷயத்தையும் நாள் தவறாமல் செய்து, வாயடைத்து போக வைக்கிறார் படப்பிடிப்பு குழுவினரை.

படத்தில் தன்னுடன் ஜோடி சேர்ந்திருக்கும் அந்த மூன்றெழுத்து ஹீரோயினுக்கு தினமும் தன் வீட்டிலிருந்தே மதிய உணவை வரவழைத்து விடுகிறார். மீன், இறால் என்று சுவை கூட்டும் இந்த ஐட்டங்களை ருசி பார்க்கும் நடிகை கொஞ்சம் கொஞ்சமாக நடிகரின் அன்பில் விழுந்து கொண்டிருக்கிறாராம். இதை கட்டுப்படுத்த முடியாமல் பெற்ற மகளை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறாராம் தாடிக்கார அப்பா! அடக்கடவுளே

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் அதிமுக, தேமுதிக!

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய (குரூப்-2) தேர்வில் அரசியல் கட்சிகளை பற்றிய கேள்விகளும், சில கேள்விகள் தவறான முறையிலும் கேட்கப்பட்டிருந்தன.

தமிழ்நாடு முழுவதும் நேற்று டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு நடைபெற்றது. காலியாக இருக்கும் 986 பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 2.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தவறாகவும், எப்போதுமில்லாத வகையில் அரசியல் கட்சிகளை பற்றியும் கேள்விகளும் இடம் பெற்றிருந்தன.

அதில் கேட்கப்பட்ட சில கேள்விகள்:

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அங்கீகாரம் இல்லாமல் போட்டியிட்ட கட்சி எது? என்று கேட்கப்பட்டு அதற்கு பாமக, தேமுதிக, டிபிஐ, மதிமுக என்று 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் அஇஅதிமுக முதன் முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு எது?

காட் அமைப்பு எப்போது துவங்கப்பட்டது? என்று கேட்கப்பட்டிருந்தது. காட் ஒப்பந்தம் தான் தவிர அது ஒரு அமைப்பு கிடையாது. (காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் இணைந்து தான் சர்வதேச வர்த்தக அமைப்பை (World Trade Organization-WTO) பின்னர் ஏற்படுத்தின என்பது நினைவுகூறத்தக்கது)

அதே போன்று தேசிய கொடியை தயாரித்தவர் யார்? என்று ஒரு கேள்வி. வழக்கமாக தேசியக் கொடியை வடிவமைத்தவர் யாரென்று தான் கேட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பஸ்சில் சிக்கிய ரூ.1 கோடி ஹவாலா பணம

கேரளா: பெங்களூரில் இருந்து கேரளா வந்த தனியார் பேருந்தில் வந்த பயணிகளிடம் ரூ.1 கோடி ஹவாலா பணம் பிடிபட்டது.

கேரளா-கர்நாடகா எல்லையில் முதங்கா என்ற இடத்தில் அந்த பேருந்தை கேரள மாநில சோதனை சாவடி போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது அதில் இருந்த சில பயணிகளிடம் 1 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பணம் குறித்து கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலை சொல்லியதால் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த பணத்தை கண்ணூர், கோழிக்கோடு, மஞ்சேரி ஆகிய ஊர்களில் பிரித்து கொடுப்பதற்காக வந்ததாக தெரிய வந்துள்ளது. அவர்கள் தந்த தகவலின்பேரில் மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 10 தினங்களுக்கு முன்னர் மைசூர் வழியாக கேரளாவுக்கும் அரசு பேருந்தில் ரூ.80 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மோசமான சட்டம்-ஒழுங்கு: திமுகவுக்கு விஜயகாந்த் 'நூற்றுக்கு நூறு'


சென்னை: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருப்பதில் ஆளும் திமுக அரசுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது,

நாங்கள் கட்சி தொடங்கிய ஒரு வருடத்தில் தேர்தலை சந்தித்து பெருவாரியான வாக்குகள் பெற்றிருக்கிறோம்.

தனியாகவே போட்டியிட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவை நாங்கள் பெற முடியும். எதையும் தாக்குப் பிடிக்கும் தைரியமும், பொறுமையும் எங்களுக்கு இருக்கிறது. மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கட்சி என்பதால் நிச்சயம் தனித்து நின்று எங்களால் வெற்றி பெற முடியும்.

திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு மாற்றாக மக்கள் தேமுதிகவை நினைக்கிறார்கள். அவர்களது உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்க விரும்புகிறேன்.

திமுக மற்றும் அதிமுகவின் முறைகேடுகளையும் அராஜகத்தையும், மக்கள் விரோத போக்கையும் எதிர்க்கும் நாங்கள் அந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாது. தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் கூட்டணி அமைப்பார்கள்.

திமுகவை எதிர்க்கும் அளவுக்கு அதிமுகவை நான் எதிர்ப்பதில்லை என்று சொல்கிறார்கள். திமுக தான் ஆட்சியில் இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இல்லை. ஆட்சியாளர்களின் குறைகளைத் தான் சுட்டிக்காட்ட முடியும். எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதில் என்ன பயன்.

மக்கள் அதிமுகவை தண்டித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தி விட்டார்கள். எதற்கெடுத்தாலும் அவர்கள் ஆட்சியில் நடந்தது என்று சொல்வதற்கு இவர்கள் ஏன் ஆட்சியில் அமர வேண்டும். 50 வருட அரசியல் அனுபவம் இருந்து என்ன பயன்.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று குறை கூறிய திமுக முறையாக நகராட்சி தேர்தலை நடத்தியதா. மக்களை வாக்களிக்க அனுமதித்தார்களா. மக்களின் பார்வையில் இரு கட்சிகளுமே ஒன்று தான்.

இந்த அரசு உருப்படியாக எந்த திட்டத்தையும் அறிவிக்கவும் இல்லை. செயல்படுத்தவும் இல்லை. ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு என்று சொல்லி அவர்களது கட்சிக்காரர்கள் வெளி மாநிலங்களுக்கு அரிசி கடத்தி சம்பாதிக்க வழி செய்ததும், இலவச கலர் டி.வி. என்ற பெயரில் கட்சிக்காரர்கள் அரசு தரும் டி.வி.க்களை விற்று சம்பாதிக்க வழி வகுத்ததும்தான் இந்த அரசின் சாதனை.

இதே போல இலவச கியாஸ் அடுப்பு இன்னொரு மோசடி திட்டம். பாவம் ஏழைகள். மண்ணெண்ணெய் வாங்கிக் கொண்டு இருந்தவர்கள் இப்போது கேஸ் சிலிண்டர் வாங்க ரூ.300க்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். எதையுமே உருப்படியாக செய்வதில்லை என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது.

தெளிவில்லாத, குறிக்கோள் இல்லாத ஆட்சி ஒன்று இருக்குமானால் அது இந்த ஆட்சிதான்.

இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இதற்கு வேண்டுமானால் இந்த ஆட்சிக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் கொடுத்தே தீர வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்த ஆட்சிக்கு தலைமை தாங்குபவர் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பும் கோபமும் என்னிடமும் உண்டு.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்குகிறார்கள். அவர்களது கட்சி மாவட்ட செயலாளரே வெட்டிச் சாய்க்கப்படுகிறார். இதுதான் இந்த ஆட்சியின் சாதனைகள்.

நான் தெரியாமல் தான் கேட்கிறேன். நமது உள்ளாட்சித்துறை அமைச்சர் எதற்காக பாங்காக் போனார். இத்தனை பத்திரிக்கைகள் கேட்கின்றன, யூகங்கள் எழுகின்றன. ஏன் பதில் சொல்ல மறுக்கிறார். முதல்வருக்கு தெரிந்து போனாரா, தெரியாமல் போனாரா. தனிப்பட்ட பயணமாகப் போனாரா. பொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சர் எங்கே போனார், எதற்காக போனார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின் என்னைப்பற்றி பேசியதற்காக அவர்மீது கோபப்படுவதைவிட நான் பரிதாபப்படுகிறேன். அரசியலில் மார்கெக்ட இழந்தால்தான் அவரது தந்தை சினிமாவில் கண்ணம்மா, பாசப்பறவைகள் என்று கதைவசனம் எழுதினாரா என்று கேட்பதற்கு எவ்வளவு நேரமாகும்.

எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது. ஆனால் இப்படி மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றுகிறார்களே என்ற ஆதங்கம் இருக்கிறது என்றார் விஜயகாந்த்.

சபரிமலையில் 18 படிகளை தொட முயன்ற பெண் கைது

சபரிமலை: சபரி மலை ஐயப்பன் சன்னிதானத்தில் 18 படிகளை தொட முயன்ற புதுச்சேரியை‌ சேர்ந்த 30 வயது பெண் கைது செய்யப்பட்டார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை தொடங்கியது.

சபரி மலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந் நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த 30 வயதான செல்வி என்பவர் எப்படியோ சபரிமலைக்கு வந்துவிட்டார்.

ஐயப்பன் சன்னிதானத்தில் உள்ள புனித 18 படிகளை தொட அவர் முயற்சி செய்தார். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.

லேகா படத்தில் பாவனா


சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயம்கொண்டான் படத்தில் பாவனா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் லேகா வாஷிங்டன்தான் 2வது நாயகி.

கடந்த ஆண்டு வெளியான எம் மகன் படத்துக்குப் பின்னர் சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்த படத்திற்குத் தயாராகியுள்ளது. மணிரத்தினத்தின் உதவியாளரான ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஜெயம் கொண்டான் என்று புதிய படத்தை எடுக்கவுள்ளது சத்யஜோதி பிலிம்ஸ்.

உன்னாலே உன்னாலே நாயகன் வினய் இப்படத்தின் ஹீரோ. அவருக்கு ஜோடியாக பாவனா நடிக்கிறார். 2வது நாயகியாக லேகா நடிக்கிறார்.

ஜெயம்கொண்டான் படம் குறித்து பாவனா கூறுகையில், இப்படத்தில் நான் நாயகியாக நடிக்கிறேன். இன்னொரு ஹீரோயினும் படத்தில் இருக்கிறார். இருப்பினும், எனது கேரக்டர் எனக்கு பிடித்துள்ளது, திருப்தியாக உள்ளதால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இதில் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை. ஆனால் அனைவரையும் கவரும் வகையில் நடிக்கப் போகிறேன் என்றார்.

நேற்று முதல் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். பட பூஜையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கே.ஆர்.ஜி,, இயக்குநர்கள் மணிரத்தினம், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடப்பா தர்ஹாவில் ஐஸ், அபி


ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புகழ் பெற்ற தர்ஹாவுக்கு அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யா ராயும் தம்பதி சமேதரமாக வந்து வணங்கினர்.

கடப்பாவில் உள்ள பெட்டா தர்ஹா மிகவும் புகழ் பெற்றது. இந்த தர்ஹாவுக்கு நேற்று ஐஸ், அபிஷேக் ஜோடி வந்தது. அவர்களுடன் ஜெயா பச்சன் மற்றும் (வழக்கம் போல) அமர்சிங்கும் உடன் வந்திருந்தனர்.

பெங்களூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கடப்பா வந்த அவர்கள் நேராக தர்ஹாவுக்கு சென்று வழிபட்டனர்.

தர்ஹாவில் ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும், சதர் நன்கொடையாக வழங்கினர். மேலும் சிறப்பு வழிபாடும் நடத்தினர்.

நபிகள் நாயகத்தின் வழித்தோன்றலில் வந்த ஒரு இறைத் தலைவர்தான் இந்த தர்ஹாவை உருவாக்கியதாக கூறப்படுகிறது. 400 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த தர்ஹா, தென்னகத்தின் ஆஜ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் வரும்தகவலை அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள் குவிந்து விட்டனர். 3 மணி நேரம் தர்ஹாவில் செலவிட்ட பின்னர் ஐஸ்வர்யா, அபிஷேக் ஜோடியும், ஜெயா பச்சன், அமர்சிங் ஆகியோரும் பெங்களூருக்குத் திரும்பிச் சென்றனர்.

இந்த தர்ஹாவுக்கு அடிக்கடி விஜயம் செய்யும் இன்னொரு பிரபலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஆசினும் ஷாருக்குடன்!


தொடர்ந்து 3வது தீபாவளியாக தான் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் ஆசின் படா சந்தோஷமாக உள்ளார்.

ஆசினை, தீபாவளி ராணி என கோலிவுட்டில் செல்லமாக கூப்பிட ஆரம்பித்துள்ளனராம். காரணம் அவர் கடந்த 3 தீபாவளியாக நடித்து வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களானதால்.

முதலில் சிவகாசி, பிறகு வரலாறு, இப்போது வேல் என கடந்த 3 தீபாவளிகளாக ஆசின் நடித்து வெளியான படங்கள் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இதனால் மும்மடங்கு சந்தோஷத்தில் இருக்கிறார் ஆசின்.

2005ம் ஆண்டு விஜய்யுடன் இணைந்து ஆசின் நடித்த சிவகாசி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. விஜய் படங்களிலேயே மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் இது. இதையடுத்து கடந்த தீபாவளிக்கு அஜீத்துடன் இணைந்து நடித்த வரலாறு வெளியானது. இந்தப் படமும் பெரும் வரலாறு படைத்தது.

தற்போது வெளியாகியுள்ள வேல் படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. திரையிட்டுள்ள அனைத்து இடங்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது வேல்.

இந்த தொடர் வெற்றி குறித்து ஆசின் கூறுகையில், தீபாவளியன்று நான் சென்னையில்தான் இருந்தேன். சத்யம் தியேட்டருக்குப் போய் வேல் மற்றும் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் ஆகிய இரு படங்களையும் பார்த்தேன். ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தையும் பார்த்து ரசித்தேன் என்றார் ஆசின்.

தற்போது இந்தி கஜினியில் ஆமிர் கானுடன் இணைந்துள்ள ஆசின், அடுத்து ஷாருக்கானுடன் ஜோடி சேரப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்து இதுவரை வாய் திறக்காமல் உள்ளார் ஆசின்.

மீண்டும் ஏவி.எம்.முடன் சூர்யா


வி.எம். நிறுவனத்துடன் மீண்டும் சூர்யா கை கோர்க்கிறார். பேரழகன் படத்திற்குப் பிறகு மறுபடியும் ஏவி.எம். நிறுவனத்துடன் இணைந்து புதிய படத்தைக் கொடுக்கப் போகிறாராம் சூர்யா.

புகழ் பெற்ற ஏவி.எம். நிறுவனத்துடன் சூர்யா இணைந்த முதல் படம் பேரழகன். பெரும் வெற்றியைக் கொடுத்த படம் மட்டுமல்லாது, சூர்யாவின் நடிப்பில் புதிய பரிமாணத்தை வெளிக் கொணர்ந்த படமும் கூட.

இந்த நிலையில் சிவாஜியைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கு ஏவி.எம். தயாராகி விட்டது. இப்படத்தை கேமராமேன் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார். இவர்தான் சிவாஜி படத்திற்கு கேமரா மேன் என்பது நினைவிருக்கலாம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். சூர்யாதான் நாயகன்.

பிப்ரவரி மாதம் இந்தப் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. சூர்யா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் வாரணம் ஆயிரம் படத்தை முடிப்பதற்கு வசதியாக அடுத்த பிப்ரவரி வரை காத்திருக்கப் போகிறார்களாம்.

தற்போது ஏவி.எம். நிறுவனம் இந்தி சிவாஜியை வெளியிடும் வேகத்தில் மும்முரமாக உள்ளது என்பது நினைவிருக்கலாம்.

மனோஜ்குமாரிடம் ஷாருக் மன்னிப்பு


ஓம் சாந்தி ஓம் படத்தில் தனது கேரக்டரை ஷாருக்கான் சித்தரித்துள்ள விதம் குறித்து பழம்பெரும் நடிகர் மனோஜ்குமார் அதிருப்தியும், கோபமும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் ஷாருக்கான், படத்தின் இயக்குநர் பாரா கான் ஆகியோர் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

ஷாருக்கான், தீபிகா படுகோண் நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வெற்றிப் படமாகியுள்ளது ஓம் சாந்தி ஓம். இந்தியா தவிர வெளிநாடுகளிலும் கூட ஓம் சாந்தி ஓம் அலை படு வேகமாக பரவியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் தன்னை மிகவும் மோசமாக சித்தரித்திருப்பதாக பழம் பெரும் நடிகர் மனோஜ்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார். நகைச்சுவை என்ற பெயரில் தன்னை இழிவுபடுத்தி விட்டனர் என்றும் அவர் குமுறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது என்னை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல், தேசபக்தி கொண்ட ஒவ்வொரு இந்திய ஆத்மாவையும் காயப்படுத்தியுள்ளது.

எனது படங்களில் தேச பக்தியையும், தியாகத்தையும் நான் வலியுறுத்தி நடித்தேன். இதனால்தான் எனது படங்களில் எனது கேரக்டர்களுக்கு பாரத் என்று பெயர் வைத்தேன். மக்களும் என்னை பாரத்தாகவே அங்கீகரித்துள்ளனர். எனவே, தேச விரோதிகள்தான் எனது இந்த தேச பக்தியை விமர்சிக்க முடியும், இப்படி அவமானப்படுத்த முடியும் என்று குமுறியுள்ளார் மனோஜ்குமார்.

ஷாருக்கான் தயாரிக்க, பிரபல டான்ஸ் மாஸ்டர் பாரா கான் ஓம் சாந்தி ஓம் படத்தை இயககியுள்ளார். இப்படத்தின் முதல் பாதியில், 70ம் ஆண்டுகளின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜூனியர் நடிகராக ஷாருக்கான் வருகிறார். சாந்திப்ரியா (தீபிகா) நடித்துள்ள ட்ரீமி கேர்ள் என்ற படத்தைப் பார்க்க மனோஜ்குமார் போல வேடமிட்டுக் கொண்டு தியேட்டருக்கு வருகிறார்.

அப்போது நிஜமான மனோஜ்குமார் தியேட்டருக்கு வருகிறார். ஆனால் அவரை டுபாக்கூர் என நினைக்கும் தியேட்டர் செக்யூரிட்டிகள் அடித்து நையப்புடைத்து விடுகின்றனர்.

இதேபோல இன்னொரு காட்சியிலும் மனோஜ்குமாரை இமிட்டேட் செய்து காமெடி செய்யப்பட்டுள்ளதாம்.

மனோஜ்குமார் அதிருப்தி வெளியிட்டதைத் தொடர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்பதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார். படத்தின் இயக்குநர் பாராகானும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இருவரும் பல்வேறு இந்தி மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் இந்த மன்னிப்பைக் கோரியுள்ளனர்.

ஷாருக் கூறுகையில், மனோஜ்குமாரிடம் நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அவரது பேட்டியைப் பார்த்து நான் வேதனை அடைந்தேன். அவர் என்னை மன்னிக்க வேண்டும். நான் அவரை நேரில் சந்தித்து எனது படத்தை அவருக்குப் போட்டுக் காட்டுவேன் என்றார் ஷாருக்

மறுபடியும் மல்லிகா கபூர


சின்ன இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் நடிக்க வருகிறார் மல்லிகா கபூர்.

அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது மூலம் தமிழில் நடிக்க வந்தவர் மல்லிகா கபூர். பிறகு அற்புதத் தீவிலும் குள்ள நடிகர்களுடன் கலகலக்க வைத்தார்.

எல்லாம் சீரும் சிறப்புமாக இருந்தும் மல்லிகா கபூருக்கு தமிழில் சரிவர வாய்ப்புகள் இல்லை. இதனால் தெலுங்குக்கும், தமிழுக்குமாக அலை பாய்ந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் புதிதாக ஒரு படம் அவரைத் தேடி வந்துள்ளது.

ஷாம் நாயகனாக நடிக்கும் அந்தோணி - யார்? என்ற படத்தில் மல்லிகா கபூர் திறமை காட்டவுள்ளார். இப்படத்தின் கதை சற்றே வித்தியாசமானது.

கடலோர கிராமத்தில் ஒரு குழந்தை கட்டுமரத்தில் வந்து ஒதுங்குகிறது. ஊர் மக்கள் அக்குழந்தையை எடுத்து வளர்க்கின்றனர். அங்குள்ள அந்தோணியார் கோவில் அருகே குழந்தை கிடைத்ததால், அக்குழந்தைக்கு அந்தோணி என்று பெயர் இடுகின்றனர். வளர்ந்து, வாலிபனாகும் அக்குழந்தையும் மீனவனாகிறது.

அந்த அந்தோணி யார் என்பதுதான் படத்தின் மீதிக் கதையாம். இப்படத்தில் மல்லிகாவுக்கு நடிப்புக்கேற்ற கேரக்டராம். கிளாமரும் படத்தில் இருக்கிறதாம்.

மல்லிகா தவிர காணாமல் போன பிரகதியும் படத்தில் இருக்கிறார். இவருக்கு 2வது நாயகி வேடமாம்.

இயக்குநர் செல்வாவின் உதவியாளர் பாண்டி இப்படத்தை இயக்கி அறிமுகமாகிறார். தினா இசையமைக்கிறார். கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்.

ஆங்கில மோகத்தில் மலையாளம்!


லையாள திரையுலகில் ஆங்கிலப் பெயர்கள் வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் திலீப்பின் படங்களுக்கு தொடர்ந்து ஆங்கில டைட்டில்களே வைக்கப்பட்டு வருகின்றன.

கொஞ்ச காலத்திற்கு முன்பு தமிழ்த் திரையுலகினர் ஆங்கில மோகத்துடன் அலைமோதிக் கொண்டிருந்தனர். சற்றும் சம்பந்தம் இல்லாத பெயர்கள் வைக்தப்பட்டன. ஆங்கிலம் தவிர ஏய், ஊய், ஓய் என்ற ரீதியிலும் குண்டக்க மண்டக்க பெயர்கள் வைக்கப்பட்டன.

இப்படி தமிழுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பெயர்களை வைக்கக் கூடாது என்று கோரி பல அரசியல் கட்சிகள் போராட்டங்களையும் நடத்தின. ஆனால் சரிப்பட்டு வரவில்லை. ஆனால் முதல்வராக கருணாநிதி பதவியேற்றதும், தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து இப்போது சுத்தத் தமிழில் பெயர் வைக்க ஆரம்பித்துள்ளனர். ஆங்கிலப் பெயர்கள் அடியோடு ஒழிந்து விட்டன.

ஆனால் மலையாளத்தில் கதை நேர் மாறாக உள்ளது. சுத்தமான ஆங்கிலத்தில்தான் பெயர் வைத்து படங்கள் வருகின்றனர். ஒரு காலத்தில் அற்புதமான பெயர்களில் மலையாளப் படங்கள் வெளியாகின. ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டது.

ஆங்கிலப் பெயர்கள் இல்லாத படங்களை காண்பது அரிதாகி வருகிறது. இவர்களில் குறிப்பாக திலீப் தனது படங்களுக்குத் தொடர்ந்து ஆங்கிலத்தில் பெயர் சூட்டி வருகிறார்.

ரன்வே, தி செஸ், ஸ்பீட் டிராக் ஆகிய படங்கள் ஹிட் ஆனதால் தொடர்ந்து அதே டைப்பில் பெயர் வைத்து வருகிறார்.

தற்போது அவர் கொல்கத்தா நியூஸ், ரோமியோ என இரு படங்களில் நடித்துள்ளார். இதுதவிர அடுத்ததாக குட்டநாடன் எக்ஸ்பிரஸ் என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

திலீப் மட்டுமல்லாது மற்ற நடிகர்களும் கூட ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கவே விருப்பமாக உள்ளனராம். மோகன்லால் சமீபத்தில் நடித்துள்ள படம் ராக் அண்ட் ரோல்.

இன்னொரு கருணாநிதியாக மாறுவாரா அச்சுதானந்தன்?

ஆசியாவின் 'அழகுப் பிசாசு' பிபாஷா


பாலிவுட்டின் கிளாமர் 'பாய்லர்' பிபாஷா பாசுவை, ஆசியாவிலேயே செக்சியான பெண் என இங்கிலாந்தைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ நாளிதழ் தேர்வு செய்துள்ளது.

பாலிவுட்டின் 'கிளாமர் பிசாசு' பிபாஷா பாசு. இவரது கிளாமர் ஆட்டத்திற்கும், கவர்ச்சி நடிப்புக்கும் பாலிவுட்டில் பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. பிபாஷா நடிக்கும் படம் என்றால் கிளாமருக்கு 200 சதவீதம் கியாரண்டி தரலாம். அந்த அளவுக்கு கிளாமர் புயலால் பாலிவுட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பிபாஷா, தற்போது ஆசியாவிலேயே செக்சியான பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஏற்கனவே 2005ம் ஆண்டும் இந்தப் பெருமை பிபாஷாவுக்குக் கிடைத்தது. தற்போது 2வது முறையாக செக்ஸி கேர்ள் பெருமையைப் பெற்றுள்ளார் பிபாஷா.

இதுகுறித்து பிபாஷா கூறுகையில், மறுபடியும் என்னை ஆசியாவிலேயே செக்சியான பெண்ணாக தேர்வு செய்ததை பெருமையாக கருதுகிறேன். இதை தக்க வைத்துக் கொள்ள முயல்வேன்.

செக்சி என்பது உடல் கட்டை மட்டும் பொருத்தல்ல. அதையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளன. மொத்தமாக பார்த்துத்தான் ஒருவரை செக்சியானவரா, இல்லையா என்று சொல்ல முடியும்.

நமது தோற்றம், செயல்பாடுகள், எதையும் கையாளும் திறமை உள்ளிட்டவற்றை வைத்துத்தான் செக்சியானவரா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.

என்னை 2வது முறையாக செக்சியான பெண் என்று தேர்வு செய்துள்ளது சந்தோஷமான விஷயம். கெளரவமாக கருதுகிறேன். எனது உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன் என்றார் பிபாஷா.

பிபாஷாவை 2வது முறையாக செக்சியான பெண்ணாகத் தேர்வு செய்த ஈஸ்டர்ன் ஐ இதழின் ஆசிரியரும், உலக அளவில் செக்சியான பெண்கள் பட்டியலை உருவாக்கியவருமான ஹேமந்த் வர்மா கூறுகையில், செக்சியான, கவர்ச்சியான பெண்களிடையே பிபாஷா வித்தியாசமானவர். அவரது நடிப்புத் திறமை, அழகு, கவர்ச்சி ஆகியவை மிகவும் சிறப்பானவை. உலகம் முழுவதும் உள்ள மீடியாக்களைக் கவரக் கூடிய அளவுக்கு அழகானவர் பிபாஷா என்றார்.

கடந்த ஆண்டு இந்தப் பட்டத்தைத் தட்டிச் சென்றவர் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா. ஆனால் இந்த ஆண்டு அவருக்கு 3வது இடம்தான் கிடைத்துள்ளது. 2வது இடத்தைப் பிடித்திருப்பவர் அந்தக் காலத்து அழகு நாயகி மாதுரி தீக்ஷித்.

இந்த அழகுப் பெண்கள் பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு 4வது இடமும், ஷில்பா ஷெட்டிக்கு 6வது இடமும், காத்ரீனா கைப், கரீனா கபூர், லாரா தத்தாவுக்கு அடுத்தடுத்த இடங்களும் கிடைத்துள்ளன.

இந்த இதழில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 100 அழகுப் பெண்களின் பட்டியலைக் கொடுத்து அதில் செக்சியான பெண் யார் என்பதை தேர்வு செய்யுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொண்டனர். அவர்கள் போட்ட ஓட்டின் அடிப்படையில்தான் பிபாஷா பாசுவுக்கு செக்சியான பெண் என்ற பட்டம் கிடைத்துள்ளது.

திட்டும் திவ்யா!


முன்னாள் குத்து ரம்யாவான, இன்னாள் திவ்யா, தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள பொல்லாதவன் சிறப்பாக ஓட ஆரம்பித்திருப்பதால் சந்தோஷமாகியுள்ளார். அந்த சந்தோஷத்தோடு தெலுங்குத் திரையுலகை திட்டவும் ஆரம்பித்துள்ளார்.

குத்து படம் மூலம் தமிழுக்கு வந்த கன்னடத்து ரம்யா, அதன் பிறகு குத்து ரம்யா, குத்து ரம்யா என்று திரையுலகினராலும், ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்பட்டார். ஆனால் குத்து ரம்யா என்று கூப்பிடுவதில் சில்மிஷம் அடங்கியிருப்பதாக சிலர் கொடுத்த ஆலோசனையின் பேரில் தனது பெயரை திவ்யா என மாற்றிக் கொண்டார்.

திவ்யாவாக மாறிய பின்னர் தூண்டில் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் நடித்து முதலில் வெளியாகியுள்ள படம் பொல்லாதவன். தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ள திவ்யா, இப்படம் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதை அறிந்து சந்தோஷமாகியுள்ளார்.

முன்பு தமிழில் தனக்கு சரியான வாய்ப்புகள் வராததால், தமிழ் திரையுலகம் மீது துவேஷம் கொண்டிருந்த திவ்யா இப்போது தமிழ் திரையுலகை பாராட்டித் தள்ள ஆரம்பித்துள்ளார். அதேசமயம் தெலுங்குத் திரையுலைக திட்டவும் ஆரம்பித்துள்ளார்.

ஏன் இந்த கொலை வெறி என்று திவ்யாவிடம் கேட்டால், தமிழ், கன்னடத் திரையுலகுடன் ஒப்பிடும்போது தெலுங்குத் திரையுலகம் மிகவும் பின் தங்கியுள்ளது (கன்னடத்தை விட தெலுங்குத் திரையுலகம் மோசமா - இது ரொம்ப ஓவருங்கோ)

மூட நம்பிக்கைகளிலும், முட்டாள்தனமான சிந்தனைகளுடன் தெலுங்குத் திரையுலகம் உள்ளது. அதனால்தான் தெலுங்கில் நடிக்க நான் ஆர்வம் காட்டவில்லை. என்னைப் பொருத்தவரை தமிழ்தான் இப்போது முக்கியம் இங்குதான் திறமையான கலைஞர்கள் உள்ளனர். நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளனர்.

தென்னிந்திய சினிமாவின் தலைநகர் சென்னைதான் என்பதில் சந்தேகமே இல்லை. திறமையான கலைஞர்களுக்கு ஆதரவு தர தமிழ் மக்கள் என்றுமே தயங்கியதில்லை.

எனக்கு இருந்த ஒரே வருத்தம் என்னவென்றால் என்னை குத்து ரம்யா என்று கூப்பிட்டதுதான். நான் குத்து ரம்யா இல்லை. எனது பெயரை இப்போது திவ்யா என்று மாற்றி விட்டேன். அதுதான் எனது ஒரிஜினல் பெயரும் கூட. பெயரை மாற்றியதும் எனக்கு நேரம் சரியாக இருக்கிறது (இது மூட நம்பிக்கை இல்லீங்களா மேடேம்)

திவ்யா என பெயரை மாற்றிய பிறகு தமிழிலும், கன்னடத்திலும் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன என்றார் திவ்யா.

சில மாதங்களுக்கு முன்பு இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்தார் திவ்யா. ஆனால் அந்தப் படங்கள் ஊற்றிக் கொண்டு விட்டன. இதையடுத்து ராசியில்லாத ராணிகள் பட்டியலில் திவ்யாவை சேர்த்து விட்டனர். இதனால்தான் தற்போது தெலுங்குத் திரையுலகம் மீது திவ்யா பாய்ந்துள்ளதாக தெரிகிறது.

தற்போது திவ்யா, கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தூண்டில் படத்தில் ஷாமுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் சந்தியாவும் இருக்கிறார்.

இதுதவிர கன்னடத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் செக்ஸ் தொழிலாளர்கள் குறித்த படம். இப்படத்தை சந்தோஷ் சிவன் இயக்குகிறார்.

ரகஸ்யா - தனுஷ்யா


ஆலயம் படத்தின் நாயகி தனுஷ்யா கிளாமரில் ஒரு பக்கம் துள்ளி விளையாட, ரகஸ்யா ஒரு பாட்டுக்கு கிளுகிளுப்பான ஆட்டத்தைப் போட்டுள்ளார்.

ரவிச்சந்தர் என்ற பெயரில் பல படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் வந்தவர்தான் செம்பி என்ற பெயர் மாற்றம் கண்டு, இப்படத்தில் நாயகனாகியுள்ளார்.

தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் மிகவும் வேண்டியவர் செம்பி. காரணம், புதுச்சேரி மற்றும் சுற்றுப் புறங்களில் நடைபெறும் படப்பிடிப்புகளுக்கு செம்பிதான் முழு உதவிகளும் செய்வாராம் (காக்க காக்க படத்தில் சூர்யாவின் ஜீப் டிரைவராக வருவார்). இதனால் தமிழ்த் திரையுகினருடன் நெருக்கமான நட்பு கொண்டுள்ள செம்பி இப்போது அவரே நாயகனாகி விட்டார்.

ஆலயம் படத்தில் செம்பிக்கு ஜோடி போடுபவர் தனுஷ்யா. படு சுவாரஸ்யமாக இருக்கிறது தனுஷ்யாவைப் பார்ப்பதே. வழக்கம் போல இவரும் கேரள வரவுதான். கொள்ளை அழகுடன் இருக்கும் தனுஷ்யா, கிளாமரிலும் சிறப்பாக திறமை காட்டுகிறாராம். கிளாசிக்கல் டான்ஸிலும் தனுஷ்யா திறமை வாய்ந்தவராம். அதையும் படத்தில் பொருத்தமாக இணைத்துள்ளனர்.

இதுபோதாதென்று ரகஸ்யாவை வைத்து ஒரு குத்துப் பாட்டை எடுத்துள்ளனர். சமீபத்தில் ஏவி.எம். ஸ்டுடியோவில் வைத்து சுட்டனர். படு கிளாமரான ஆடையில் ரகஸ்யா ஆட, கூடவே செம்பியும் ஆட டான்ஸ் புளோரே குளிர்ந்து போய் விட்டது.

சரி படத்தின் கதை என்ன என்று இயக்குநர் வடிவுடையானிடம் கேட்டபோது, வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும். அதுபோலவே, வன்முறையை வன்முறையால்தான் வெல்ல முடியும் என்பதுதான் இப்படத்தின் கதை. அதேசமயம், படத்தில் வன்முறை அதிகம் இருக்காது என்றார் வடிவுடையான்.

கணவர் ஒத்துழைப்பு-மாளவிகா மகிழ்ச்சி



சினிமா உலகில் நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவரை அம்மா, அக்கா, நாத்தனார் ரோல்களுக்கு ரிசர்வ் செய்துவிடுவார்கள்.

ஹீரோயின் சான்ஸ் தர மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், குத்து பாட்டுக்குக் கூட கூப்பிட மாட்டார்கள் என்பது தான் நிஜம்.

ஆனால் இந்த விஷயத்தில் மாளவிகாவிடம் மட்டும் விதி விலக்காக நடந்து ெகாண்டுள்ளது கோலிவுட்.

சுமேஷ் மேனனை எந்த நேரத்தில் திருமணம் செய்தாரோ அப்போதிருந்து அவரது வீட்டுக் கதவை பட வாய்ப்புகள் வந்து தட்டிக் கொண்டே இருக்கிறதாம்.

இதற்கெல்லாம் தனது கணவர் தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்கிறார் மாளவிகா.

தொடர்ந்து நடிக்குமாறு அவர் தான் ஊக்குவிக்கிறாராம். அது எந்த ரோலாக இருந்தாலும் சரி, எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் சரி.

திரைப்படத் துறையில் மேக்கப் மேன், காஸ்டியூம் டிசைனர் என எல்லோருமே ஆண்கள் தான். ஆனாலும் என் கணவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை.

நான் டூ பீஸ், சிங்கிள் பீஸ் என எப்படி கவர்ச்சியாக நடித்தாலும் அவர் ஒன்றுமே சொல்வதில்லை.

இல்லற வாழ்க்கையையும் தொழிலையும் அமைதியாக நல்ல முறையில் நடத்திச் செல்ல அவர் தான் எனக்கு முழு உதவியாக இருக்கிறர். என் கணவர் அந்தளவுக்கு மெச்சூர் ஆனவர் என்கிறார் மாளவிகா.

குருவி படத்தில் நடிக்க திரிஷா முட்டி மோதி தான் நாயகி வாய்ப்பை தக்க வைக்க முடிந்தது. ஆனால் குத்துப் பாட்டுக்கு மாளவிகா தான் வேண்டும் என்று அடித்துச் சொன்னது விஜய் தானாம்.
தீபாவளிக்கு ரிலீசான விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படம் அவருடைய ரசிகர்களுக்கு எதிர்பார்த்தபடி அமையாமல் போய்விட்ட நிலையில் தனுஷ் நடித்த பொல்லாதவன் ஏமாற்றம் தராத அளவுக்கு வசூலை பார்த்து வருகிறதாம்.

இந்தப் படம் சென்னையில் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், சி சென்டர்களில் போதுமான வரவேற்பு இல்லை.

அதே நேரத்தில் கிராமத்து கதை கொண்ட சூர்யாவின் வேல் படத்துக்கு சி சென்டர்களில் ஏகப்பட்ட வரவேற்பும், நகர் பகுதிகளில் சுமார் வரவேற்பும் காணப்படுகிறது.

சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் பொல்லாதவன் 4 காட்சிகளும் ஹவுஸ்புல்லாக ஓடுவதாக தியேட்டர் வட்டாரம் கூறுகிறது. ஆனால், கோவை, மதுரை மற்றும் சேலம் நகரங்களில் இந்தப் படத்துக்கு மிகப் ெபரிய வரவேற்பு இல்லாவிட்டாலும் வசூல் ஏமாற்றம் தரவில்லை என்கிறார்கள்.

தனுஷின் மாமனாரும், சூப்பர் ஸ்டார் நடிகருமான ரஜினிகாந்த் பொல்லாதவன் ரிலீசுக்கு பிறகு தியேட்டரில் போய் தான் படத்தை பார்த்தாராம். படத்தை பார்த்துவிட்டு பொல்லாதவன் தயாரிப்பாளர், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோரை போனில் பிடித்து பாராட்டினாராம்.

தனுஷை நேரில் சந்தித்தும் வாழ்த்தவே, இந்த பாராட்டைப் பெற்றதே போதும் என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி வருகிறாராம் தனுஷ்.

உச்சத்தில் தீபிகா

ஓம் ஷாந்தி ஓம் படத்தில் நடித்தாலும் நடித்தார் நடிகர் ஷாருக் கான் மற்றும் இயக்குனர் பார்ஹாவின் மிகப் பெரிய விசிறியாகிவிட்டார் தீபிகா படுகோண். எல்லோரிடமும் இவர்களைப் பாராட்டி மகிழும் தீபிகா, இந்த இருவரும் என் குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி என்று புளகாங்கிதமடைகிறார்.

கர்நாடகத்தைச் சேர்ந்தவரான தீபிகா மாடலிங் செய்ததோடு ஆரம்பத்தில் ஒரு சில கன்னடப் படங்களிலும் நடித்து வந்தார். திடீரென ஹிேமஷ் ரேஷ்மய்யாவின் இந்தி வீடியோ ஆல்பங்களில் தீபிகா இடம் பிடிக்க, அந்த ஆல்பங்கள் சூப்பர் ஹிட்டாக, அடுத்ததாக பாலிவுட் அரவணைத்துக் கொண்டுவிட்டது.

அவரது படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிசில் வெல்லவே தயாரிப்பாளர்கள் தீபிகாவுக்கு நிரந்தர சிவப்பு கம்பளம் விரித்து விட்டனர். அந்த வரிசையில் ஷாருக் கானுடன் இவர் நடித்த ஓம் சாந்தி ஓம் படும் வெற்றி பெற்றுவிட்ட நிலையில் தீபிகாவின் மார்க்கெட் படு உச்சத்துக்குப் போய்விட்டது.

மாடலிங் செய்தபோது சில லட்சங்கள் தரவே யோசித்த நிறுவனங்கள எல்லாம் இப்போது ஒரு விளம்பரத்துக்கு தீபிகாவுக்கு ரூ. 80 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை தர தயாராக உள்ளனவாம்.

இதனால் மகிழ்ச்சியில் திளைக்கும் தீபிகா, தனக்குக் கிடைத்த இந்த பெயர், புகழுக்கு எல்லாம் ஓம் சாந்தி ஓம் பட இயக்குனர் பர்ஹாவும் ஷாருக்கும் தான் காரணம் என்கிறார். அவர்கள் என்னிடம் காட்டிய அன்பும், தந்த ஆதரவும் மறக்க முடியாதது. அவர்கள் என் குடும்ப உறுப்பினர்கள் மாதிரி என்கிறார்.