இதுவரை எத்தனையோ உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் பார்த்திருக்கிறது சேப்பாக்கம். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக திரையுலகம் நடத்திய இந்த உண்ணாவிரத பந்தலில் உணர்வுகளும், உணர்ச்சிகளும் பிரவாகமெடுத்து ஓடியது. தமிழ் திரையுலகை சேர்ந்த அத்தனை நடிகர், நடிகைகளும் ஆஜராகியிருந்தார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த இளம் நடிகர்கள் வந்த வேகத்தில் மைக்கை பிடித்து நாலு வார்த்தைகள் பேசிவிட்டு இடத்தை காலி செய்ய, துவங்கிய நேரம் முதல் இறுதிவரை உட்கார்ந்திருந்தது அர்ஜுன், பிரகாஷ்ராஜ், முரளி ஆகிய கன்னடத்தை பிறப்பிடமாக கொண்ட நடிகர்கள்தான்.
எல்லாருக்கும் பேச வாய்ப்பளித்தது பாராட்ட வேண்டியதும், கண்டிக்க வேண்டியதுமான விஷயமாகிவிட்டது. மன்சூரலிகானை மேடையில் ஏற்றிவிட்டு எப்போது இறங்குவார் என்று அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இங்கு அரசியல் வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட விஜயகுமாரை, தள்ளிவிடாத குறையாக தவிர்த்துவிட்டு வளவளத்தார் மன்சூர். நடிகர் சங்கம் ஒரு நல்ல விஷயத்தை செய்திருக்கிறது. அதற்காக நான் சங்கத்தின் மேல் தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியது அவரது பேச்சின் ஆறுதலான விஷயம். இன்று நடிகைகள் மேக்கப் போட்டுக் கொண்டு வருவார்களா? குஷ்பு கால் கால்போட்டு அமருவாரா? ஸ்ரேயா குட்டை பாவாடையுடன் வருவாரா? என்றெல்லாம் ஒரு எப்.எம் சேனலில் விமர்சித்தார்களாம். தனது பேச்சில் அதை குறிப்பிட்ட ஃபாத்திமாபாபு, நாங்கள் உணர்வுபூர்வமாக இங்கே ஒன்று கூடியிருக்கிறோம். கொச்சைப்படுத்தாதீர்கள் என்று கொந்தளித்தார். அந்த கால லதா, மஞ்சுளா ஆகியோருக்கும் வாய்ப்புகள் கொடுத்திருந்தார்கள்.
நண்பகலில் மேடைக்கு வந்தார் ரஜினி. அவர் வந்து சிறிது நேரம் கழித்து வந்தார் விஜயகாந்த். அவரை பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்ற ரஜினியின் பண்பு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதே மாதிரி, பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வந்தபோது அவரது காலை தொட்டு வணங்கினார் ரஜினி. விஜயகாந்த் வரும்போது வடிவேலு பேசிக் கொண்டிருந்தார். வடிவேலுவுக்கு கைதட்டிய கூட்டம் அப்படியே விஜயகாந்துக்காகவும் குரல் எழுப்பியது. அதை கவனிக்காதவர் போல தானும் ஓஓஓஓ...வென்று குரல் எழுப்பினார் வடிவேலு. பின்பு ஓ, அண்ணனா? என்று ஆச்சர்யப்பட்டுவிட்டு பேச்சை தொடர்ந்தார். (இவருக்கும் விஜயகாந்துக்கும் பிரச்சனை ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது) இங்கே சூப்பர் ஸ்டார் ரஜினி, அர்ஜுன், பிரகாஷ்ராஜ் ஆகிய கன்னடத்தை சேர்ந்தவர்களும் வந்திருக்காங்க. இவங்க எல்லாரையும் ஒற்றுமையாக்கி இங்கே உட்கார வைத்ததற்காக கர்நாடக போராளிகளுக்கு நன்றி என்றார் வடிவேலு.
நயன்தாரா பக்கத்தில் இடம் காலியாக இருந்ததும் அங்கே உட்கார்ந்து கொண்டார் சிம்பு. இவர் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, சிம்பு பக்கம் திரும்பாமலே உட்கார்ந்திருந்தார் நயன்தாரா. தனுஷ், விஷால், பருத்திவீரன் கார்த்தி, ஆகியோர் தலைகாட்டிய வேகத்தில் திரும்பி போனார்கள். வீட்டிலிருந்து தான் பேசப்போகும் உரையை தயார் செய்து கொண்டு வந்து படித்தார் சூர்யா. தமிழர்கள் குனிய குனிய குத்திக் கொண்டேயிருப்பார்கள். அவர்களை திருப்பி அடிக்க வேண்டும் என்றார் சேரன். நான் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவன். ஆனால் தமிழகம்தான் என்னை வாழ வைத்துள்ளது. தண்ணீர் பிரச்சனை அரசியல் தொடர்புடைய பிரச்சனை. அதற்கு பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்வுகாண முடியும். சட்டத்தை கையில் எடுக்காதே என சமூக விரோதிகளை கேட்டுக் கொள்கிறேன். வன்முறை ஆப்கானிஸ்தானில் நடந்தாலும், கர்நாடகாவில் நடந்தாலும் அது தவறுதான். இதை இத்துடன் கைவிட்டு விட வேண்டும் என்றார் பிரகாஷ்ராஜ்.
மேடையை விட்டு எதற்கோ கோபித்துக் கொண்டு போனார் கவுண்டமணி. அவரை பின்தொடர்ந்து அழைத்தவர்களையும் புறக்கணித்துவிட்டு அவர் சென்றது அதிர்ச்சியளித்தது பார்வையாளர்களுக்கு. ரயில் வண்டியின் வேகம் போல மெல்ல மெல்ல சூடுபிடித்தது பிற்பகல்!
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று எத்தனை காலத்துக்கு சொல்லிக் கொண்டிருக்க முடியும்? இங்கே வந்து பிழைப்பவர்கள் வாலை நீட்டினால் ஒட்ட நறுக்கவும் தெரியணும். மும்பையிலே பால்தாக்கரே என்பவன் தமிழனை தாக்கினான். இலங்கையிலே தமிழனை சுட்டுக் கொல்கிறான். இப்போ கர்நாடகத்திலே அடிக்கிறான். உரிமையோடு கேட்பதற்கு என்ன பயம்? எங்களுக்கு உரிமையுள்ள தண்ணீரை எங்க இடத்திலே எடுத்துக் கொள்வதை நீ எப்படி தடுக்க முடியும்? என் பொண்டாடியிடம் நான் படுக்க கூடாதுன்னு சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு? என்று ஆவேசமாக பேசிய சத்யராஜ், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை எக்குதப்பாக பிரயோகிக்க, அதிர்ச்சியில் உறைந்து போனது மேடை. இலங்கை பிரச்சனையில் வாய் திறக்கவே அஞ்சுகிறவர்களுக்கு மத்தியில் சத்யராஜ் பேச்சில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அனல் பறந்தது. பேசிவிட்டு அமர்ந்தவருக்கு எங்கிருந்தோ போன் வர, தலையாட்டி கேட்டுக் கொண்டார் அவர். நீண்ட நேரமாக ரஜினியை லைவ்வாக டி.வி யில் பார்த்த அவரது மகள் சௌந்தர்யா, விழா மேடைக்கே வந்துவிட்டார். காரணம், எல்லாருடைய பேச்சையுமே உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார் ரஜினி. சிலர் பேசும்போது அவரது புருவத்தில் இறுக்கமான முடிச்சுகள். அப்பா டென்ஷன் ஆகிவிடக் கூடாதே என்ற காரணமாகவும் இருக்கலாம் சௌந்தர்யாவின் வருகைக்கு.
இறுதியாக பேச வந்தார் ரஜினி. அதுவரை அவரது ஒவ்வொரு செயலையும் ஆர்வத்தோடு கவனித்து வந்த பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் ரஜினி என்ன பேசுவாரோ? என்ற ஆர்வத்தில், காதுகளை கூர்மையாக்கிக் கொண்டார்கள். இது விழா அல்ல. ஒரு சந்திப்பு. அதிகமாக பேசி மக்களிடம் மதிப்பும் மரியாதையும் வாங்கிறது கஷ்டம். அதே கொஞ்சமா பேசி மதிப்பும் மரியாதையும் வாங்கிறது கஷ்டம். நடந்த சம்பவங்களை நினைச்சு பார்த்தால் வேதனையா இருக்கு. கஷ்டமா இருக்கு. ஒகேனக்கல் குடிநீர் விஷயத்தில் கர்நாடகாவின் செயலை வன்மையா கண்டிக்கிறேன். இதையெல்லாம் பார்க்கும் போது நாடு எங்கே போயிட்டு இருக்கு? கவர்மென்ட் இருக்கா? சட்டம், நீதிமன்றங்கள் இருக்கா? இரண்டு பேருக்கும் சொந்தம், ஆளுக்கு பாதி பாதின்னு மத்திய அரசு முடிவெடுத்த பிறகும், தண்ணியை எடுக்க கூடாதுன்னு அவங்க சொன்னா, அவங்களை உதைக்க வேண்டாமா? கர்நாடகாவில் இருக்கிற ஒரு தேசிய தலைவர் தேர்தல் வருது என்பதற்காக மக்களை தூண்டி விடறார். இது ரொம்ப கேவலம். உண்மையை பேசுங்க. சத்தியத்தை பேசுங்க. சுயநலம் இல்லாம பேசுங்க. நான் கர்நாடகாவில் இருக்கிற பங்காரப்பா, எடியூரப்பா, தரம்சிங், போன்ற அரசியல் தலைவர்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்துல அரசியலை கலக்காதீங்க. நான் கலைஞரிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே தடுக்கணும். விரலால் கிள்ளி எறியுற பிரச்சனையை கோடாலியால் வெட்டி சாய்க்கும்படி வச்சிட வேண்டாம். இவ்வாறு ரஜினி பேச, அதுவரை ரஜினியை கன்னட வெறியர்களுக்கு ஆதரவானவர் என்று நினைத்திருந்த பலரின் இமேஜ் பொடிப்பொடியாக தகர்ந்து போனது.
இதே நாளில் கர்நாடகாவில் நடந்த உண்ணாவிரதத்தில் தமிழில் நடிக்கும் ரம்பா, திவ்யா ஆகியோர் கலந்து கொண்டது பலரது புருவத்தையும் உயர வைத்திருக்கிறது.