Friday, April 4, 2008

மீண்டும் நூறாவது நாள்!


சத்யராஜின் மொட்டை நடிப்பில் பரபரப்பாக ஓடிய நூறாவது நாள் ரீமேக் ஆகிறது. சத்யராஜ் கேரக்டரில் அவரே நடிக்கவுள்ளாராம்.

மணிவண்ணன் இயக்கத்தில் உருவான மிரட்டல் படம் நூறாவது நாள். மோகன், நளினிதான் இப்படத்தின் ஜோடி. விஜயகாந்த்தும் கெஸ்ட் ரோலில் வந்திருப்பார். ஆனால் பெயர் முழுவதையும் தட்டிச் சென்றவர் வில்லனாக வந்த சத்யராஜ்.

ஆஜானுபாகுவான சத்யராஜ் இப்படத்துக்காக போட்ட மொட்டை கெட்டப் படு பாப்புலர். இந்தப் படத்திற்குப் பிறகுதான் சத்யராஜ் சூப்பர் டூப்பர் வில்லன் ஆனார்.

இப்போது நூறாவது நாளை ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளாராம் மணிவண்ணன். சத்யராஜ் கேரக்டரில் சத்யராஜே நடிக்கவுள்ளதாக தெரிகிறது. முன்பு இளமையாக இருந்தார் சத்யராஜ். இதனால் அவரது மொட்டை இளசாக இருந்தது. இப்போது வயது ஏறி விட்டதால் மொட்டையும் படு மிரட்டலாக இருக்கும் என நம்பலாம்.

விஜயகாந்த், மோகன் கேரக்டர்களுக்கு ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். மோகன் கேரக்டரில் நடிக்க நான் ரெடி என்று கூறியுள்ளாராம் சத்யராஜின் மகன் சிபிராஜ். இதுகுறித்து சத்யராஜும், மணிவண்ணனும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

நளினி கேரக்டருக்கு பேசாமல் நமீதாவை புக் செய்துடலாமே?

நயனிடம் சிம்பு 'இம்ப்ரஸ்' முயற்சி!

உண்ணாவிரதம் இருக்க வந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டு நயனதாராவை இம்ப்ரஸ் செய்ய முயற்சித்தார் சிம்பு. ஆனால் அவரோ சிம்பு பக்கமே திரும்பாமல் எஸ்கேப் ஆகி விட்டார்.

காதல் முறிந்து, வார்த்தைப் போரும் வலுத்து, ஒரு வழியாக எல்லாம் ஓய்ந்து, ரசிகர்களும் கிட்டத்தட்ட மறந்து போன விஷயம் சிம்பு - நயனதாரா காதல்.

ஆனால் சிம்புவால் மட்டும் இன்னும் நயனதாராவை மறக்க முடியவில்லை போலும். இன்று சென்னையில் நடந்த திரையுலகினரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரதிபலித்தது.

எப்படியும் நயனதாரா வந்துதானே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்தாரோ என்னவோ, சிம்புவின் பார்வையில் ஒரு அலை காணப்பட்டது. நயனதாரா வந்தபோது அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்ற சிம்பு, நயனதாரா அருகில் இருந்த சீட்டில் டக்கென்று உட்கார்ந்து கொண்டார்.

நயனதாராவின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் நயனதாரா அந்தப் பக்கமே திரும்பவில்லை. மேலும் அருகில் இருந்த பிற கலைஞர்களுடன் பேசத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் திரிஷாவுடன் ஜாலியாக பேசத் தொடங்கினார். இம்ப்ரஸ் செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் சற்றே வருத்தம் அடைந்த சிம்பு, ஏமாற்றத்துடன் எழுந்து கர்நாடகம் தண்ணீர் கொடுக்காதது தவறு என்று மைக்கைப் பிடித்து பேச ஆரம்பித்தார்.

“உலகத்தை தமிழன் ஆளுவான்” -டென்மார்க் தமிழர் எடுக்கும் படம

“உலக நாடுகள் முழுவதும் ஈழத்தமிழர்கள் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கென்று சொல்லிக் கொள்ளதான் ஒரு நாடு இல்லை” கண்களில் கனவுகளும் ஏக்கங்களும் மின்ன பேச ஆரம்பிக்கிறார் கி.செ.துரை. ஆனால், உலகத்தையே ஒரு குடையின் கீழ் ஆளப்போகிறான் தமிழன். இது என் கனவு மட்டுமல்ல. திருமூலரும், திருவள்ளுவரும் கூட இதைதான் சொன்னார்கள் என்கிறார் துரை. டென்மார்க்கில் வசிக்கும் இந்த இலங்கை தமிழர், தனது கனவை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் இளம் புயல்.

உலகத்தை தமிழால் வாழ வைப்போம் என்பதுதான் படத்தின் மையக்கரு. இன்டர்நெட் மூலம் உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர பாடுபடும் ஒரு இளைஞன் ஒரு தனி தீவில் தனது திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். இதை தடுத்து அழிக்க நினைக்கும் வில்லன், செயற்கை சுனாமியை உருவாக்கி அந்த தீவையே மூழ்கடிக்க நினைக்கிறான். வில்லனின் யுக்தியை முறியடிக்கிற ஹீரோ எப்படி தனது லட்சியத்தை நனவாக்கினார் என்பது முடிவு. தொண்ணூறு சதவீத படத்தை டென்மார்க்கில் எடுத்திருக்கிறார் துரை. அங்கே ஐநூறுக்கும் மேற்பட்ட குட்டி தீவுகள் இருக்கிறதாம். அதில் ஒரு தீவை தேர்ந்தெடுத்து மிகப்பெரிய வள்ளுவர் சிலையையும் அங்கே நிர்மாணித்திருக்கிறார் படப்பிடிப்புக்காக. மீதியுள்ள பத்து சதவீத படப்பிடிப்பு விருதுநகர் அருகில் உள்ள கிராமத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஹீரோவாக நடித்திருக்கும் வசந்த், மற்றும் அவரது நண்பர்களாக நடித்திருக்கும் சிந்துராஜ், ரவிஷங்கர் ஆகியோர் டென்மார்க்கை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள் பூர்ணிதா, சுஜிபாலா ஆகியோர். காமெடிக்கு கருணாசும், வில்லனாக ஸ்ரீமனும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு கிச்சாஸ், நடனம் காதல் கந்தாஸ், சண்டைப்பயிற்சி அனல் அரசு, எடிட்டிங் சதீஷ் குரோசோவா என்று முக்கிய தொழில் நுட்ப கலைஞர்களை தமிழகத்திலிருந்து தேர்வு செய்திருக்கும் துரை, ஜுன் மாதம் இளம் புயலை வெளியிடும் முடிவில் இருக்கிறார். கதை, திரைக்கதை, பாடல்கள், இயக்கம் என்று நான்கு வேலைகளை ஏற்றுக் கொண்டிருக்கும் துரை, நான்கு திசைகளில் மட்டுமல்ல... எட்டு திசைகளும் பேசப்படுகிற ஒரு இயக்குனராக வர வாழ்த்துவோமே!

குருவியோடு மோத விரும்பாத படங்கள் -முன்கூட்டியே ரிலீஸ

குட்டி ரஜினியாகவே கருதப்படுகிறார் விஜய். ரஜினி படங்கள் வெளிவரும் போது எப்படி தங்கள் படங்களை ரிலீஸ் செய்யவே அஞ்சுவார்களோ, அப்படி அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் விஜய் நடித்த படங்கள் வருகிற நேரத்திலும். குருவி படம் மே 10-ந் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. அதற்கு முன்பாகவே முக்கியமான சில படங்களை வெளியிட முடிவு செய்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள். தமிழ் புத்தாண்டு தினத்தை சித்திரை ஒன்றாம் தேதிக்கு மாற்றியிருப்பதால் அவசரப்பட்டு ஒரே தேதியில் ரிலீஸ் ஆக துடிக்காமல் ஏப்ரல் மாதம் முழுவதும் படங்கள் வெளிவர இருக்கின்றன. ஆனால், இந்த புத்தாண்டு தின மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் விஜயகாந்த் தனது அரசாங்கம் படத்தை ஏப்ரல் 11-ந் தேதி ரிலீஸ் செய்யப் போகிறாராம். ஏப்ரல் 4-ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட யாரடி நீ மோகினி அன்று திரைப்பட அமைப்புகள் உண்ணாவிரதம் இருப்பதாலும், திரையரங்குகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதாலும் மறுநாள் வெளியாக இருக்கிறது. நேபாளி ஏப்ரல் 11-ந் தேதியும், அறை எண் 305-ல் கடவுள் ஏப்ரல் 12-ந் தேதியும் ரிலீஸ் ஆகவிருக்கிறது. குருவியோடு மோத எந்த படங்களாவது விரும்புகிறதா? அதுதான் இல்லை. பிழைக்கத் தெரிந்தவர்கள்!

“அவங்களை உதைக்க வேண்டாமா?” கன்னட வெறியர்கள் மேல் ரஜினி பாய்ச்சல்!

இதுவரை எத்தனையோ உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் பார்த்திருக்கிறது சேப்பாக்கம். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக திரையுலகம் நடத்திய இந்த உண்ணாவிரத பந்தலில் உணர்வுகளும், உணர்ச்சிகளும் பிரவாகமெடுத்து ஓடியது. தமிழ் திரையுலகை சேர்ந்த அத்தனை நடிகர், நடிகைகளும் ஆஜராகியிருந்தார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த இளம் நடிகர்கள் வந்த வேகத்தில் மைக்கை பிடித்து நாலு வார்த்தைகள் பேசிவிட்டு இடத்தை காலி செய்ய, துவங்கிய நேரம் முதல் இறுதிவரை உட்கார்ந்திருந்தது அர்ஜுன், பிரகாஷ்ராஜ், முரளி ஆகிய கன்னடத்தை பிறப்பிடமாக கொண்ட நடிகர்கள்தான்.

எல்லாருக்கும் பேச வாய்ப்பளித்தது பாராட்ட வேண்டியதும், கண்டிக்க வேண்டியதுமான விஷயமாகிவிட்டது. மன்சூரலிகானை மேடையில் ஏற்றிவிட்டு எப்போது இறங்குவார் என்று அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இங்கு அரசியல் வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட விஜயகுமாரை, தள்ளிவிடாத குறையாக தவிர்த்துவிட்டு வளவளத்தார் மன்சூர். நடிகர் சங்கம் ஒரு நல்ல விஷயத்தை செய்திருக்கிறது. அதற்காக நான் சங்கத்தின் மேல் தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியது அவரது பேச்சின் ஆறுதலான விஷயம். இன்று நடிகைகள் மேக்கப் போட்டுக் கொண்டு வருவார்களா? குஷ்பு கால் கால்போட்டு அமருவாரா? ஸ்ரேயா குட்டை பாவாடையுடன் வருவாரா? என்றெல்லாம் ஒரு எப்.எம் சேனலில் விமர்சித்தார்களாம். தனது பேச்சில் அதை குறிப்பிட்ட ஃபாத்திமாபாபு, நாங்கள் உணர்வுபூர்வமாக இங்கே ஒன்று கூடியிருக்கிறோம். கொச்சைப்படுத்தாதீர்கள் என்று கொந்தளித்தார். அந்த கால லதா, மஞ்சுளா ஆகியோருக்கும் வாய்ப்புகள் கொடுத்திருந்தார்கள்.

நண்பகலில் மேடைக்கு வந்தார் ரஜினி. அவர் வந்து சிறிது நேரம் கழித்து வந்தார் விஜயகாந்த். அவரை பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்ற ரஜினியின் பண்பு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதே மாதிரி, பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வந்தபோது அவரது காலை தொட்டு வணங்கினார் ரஜினி. விஜயகாந்த் வரும்போது வடிவேலு பேசிக் கொண்டிருந்தார். வடிவேலுவுக்கு கைதட்டிய கூட்டம் அப்படியே விஜயகாந்துக்காகவும் குரல் எழுப்பியது. அதை கவனிக்காதவர் போல தானும் ஓஓஓஓ...வென்று குரல் எழுப்பினார் வடிவேலு. பின்பு ஓ, அண்ணனா? என்று ஆச்சர்யப்பட்டுவிட்டு பேச்சை தொடர்ந்தார். (இவருக்கும் விஜயகாந்துக்கும் பிரச்சனை ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது) இங்கே சூப்பர் ஸ்டார் ரஜினி, அர்ஜுன், பிரகாஷ்ராஜ் ஆகிய கன்னடத்தை சேர்ந்தவர்களும் வந்திருக்காங்க. இவங்க எல்லாரையும் ஒற்றுமையாக்கி இங்கே உட்கார வைத்ததற்காக கர்நாடக போராளிகளுக்கு நன்றி என்றார் வடிவேலு.

நயன்தாரா பக்கத்தில் இடம் காலியாக இருந்ததும் அங்கே உட்கார்ந்து கொண்டார் சிம்பு. இவர் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, சிம்பு பக்கம் திரும்பாமலே உட்கார்ந்திருந்தார் நயன்தாரா. தனுஷ், விஷால், பருத்திவீரன் கார்த்தி, ஆகியோர் தலைகாட்டிய வேகத்தில் திரும்பி போனார்கள். வீட்டிலிருந்து தான் பேசப்போகும் உரையை தயார் செய்து கொண்டு வந்து படித்தார் சூர்யா. தமிழர்கள் குனிய குனிய குத்திக் கொண்டேயிருப்பார்கள். அவர்களை திருப்பி அடிக்க வேண்டும் என்றார் சேரன். நான் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவன். ஆனால் தமிழகம்தான் என்னை வாழ வைத்துள்ளது. தண்ணீர் பிரச்சனை அரசியல் தொடர்புடைய பிரச்சனை. அதற்கு பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்வுகாண முடியும். சட்டத்தை கையில் எடுக்காதே என சமூக விரோதிகளை கேட்டுக் கொள்கிறேன். வன்முறை ஆப்கானிஸ்தானில் நடந்தாலும், கர்நாடகாவில் நடந்தாலும் அது தவறுதான். இதை இத்துடன் கைவிட்டு விட வேண்டும் என்றார் பிரகாஷ்ராஜ்.

மேடையை விட்டு எதற்கோ கோபித்துக் கொண்டு போனார் கவுண்டமணி. அவரை பின்தொடர்ந்து அழைத்தவர்களையும் புறக்கணித்துவிட்டு அவர் சென்றது அதிர்ச்சியளித்தது பார்வையாளர்களுக்கு. ரயில் வண்டியின் வேகம் போல மெல்ல மெல்ல சூடுபிடித்தது பிற்பகல்!

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று எத்தனை காலத்துக்கு சொல்லிக் கொண்டிருக்க முடியும்? இங்கே வந்து பிழைப்பவர்கள் வாலை நீட்டினால் ஒட்ட நறுக்கவும் தெரியணும். மும்பையிலே பால்தாக்கரே என்பவன் தமிழனை தாக்கினான். இலங்கையிலே தமிழனை சுட்டுக் கொல்கிறான். இப்போ கர்நாடகத்திலே அடிக்கிறான். உரிமையோடு கேட்பதற்கு என்ன பயம்? எங்களுக்கு உரிமையுள்ள தண்ணீரை எங்க இடத்திலே எடுத்துக் கொள்வதை நீ எப்படி தடுக்க முடியும்? என் பொண்டாடியிடம் நான் படுக்க கூடாதுன்னு சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு? என்று ஆவேசமாக பேசிய சத்யராஜ், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை எக்குதப்பாக பிரயோகிக்க, அதிர்ச்சியில் உறைந்து போனது மேடை. இலங்கை பிரச்சனையில் வாய் திறக்கவே அஞ்சுகிறவர்களுக்கு மத்தியில் சத்யராஜ் பேச்சில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அனல் பறந்தது. பேசிவிட்டு அமர்ந்தவருக்கு எங்கிருந்தோ போன் வர, தலையாட்டி கேட்டுக் கொண்டார் அவர். நீண்ட நேரமாக ரஜினியை லைவ்வாக டி.வி யில் பார்த்த அவரது மகள் சௌந்தர்யா, விழா மேடைக்கே வந்துவிட்டார். காரணம், எல்லாருடைய பேச்சையுமே உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார் ரஜினி. சிலர் பேசும்போது அவரது புருவத்தில் இறுக்கமான முடிச்சுகள். அப்பா டென்ஷன் ஆகிவிடக் கூடாதே என்ற காரணமாகவும் இருக்கலாம் சௌந்தர்யாவின் வருகைக்கு.

இறுதியாக பேச வந்தார் ரஜினி. அதுவரை அவரது ஒவ்வொரு செயலையும் ஆர்வத்தோடு கவனித்து வந்த பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் ரஜினி என்ன பேசுவாரோ? என்ற ஆர்வத்தில், காதுகளை கூர்மையாக்கிக் கொண்டார்கள். இது விழா அல்ல. ஒரு சந்திப்பு. அதிகமாக பேசி மக்களிடம் மதிப்பும் மரியாதையும் வாங்கிறது கஷ்டம். அதே கொஞ்சமா பேசி மதிப்பும் மரியாதையும் வாங்கிறது கஷ்டம். நடந்த சம்பவங்களை நினைச்சு பார்த்தால் வேதனையா இருக்கு. கஷ்டமா இருக்கு. ஒகேனக்கல் குடிநீர் விஷயத்தில் கர்நாடகாவின் செயலை வன்மையா கண்டிக்கிறேன். இதையெல்லாம் பார்க்கும் போது நாடு எங்கே போயிட்டு இருக்கு? கவர்மென்ட் இருக்கா? சட்டம், நீதிமன்றங்கள் இருக்கா? இரண்டு பேருக்கும் சொந்தம், ஆளுக்கு பாதி பாதின்னு மத்திய அரசு முடிவெடுத்த பிறகும், தண்ணியை எடுக்க கூடாதுன்னு அவங்க சொன்னா, அவங்களை உதைக்க வேண்டாமா? கர்நாடகாவில் இருக்கிற ஒரு தேசிய தலைவர் தேர்தல் வருது என்பதற்காக மக்களை தூண்டி விடறார். இது ரொம்ப கேவலம். உண்மையை பேசுங்க. சத்தியத்தை பேசுங்க. சுயநலம் இல்லாம பேசுங்க. நான் கர்நாடகாவில் இருக்கிற பங்காரப்பா, எடியூரப்பா, தரம்சிங், போன்ற அரசியல் தலைவர்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்துல அரசியலை கலக்காதீங்க. நான் கலைஞரிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே தடுக்கணும். விரலால் கிள்ளி எறியுற பிரச்சனையை கோடாலியால் வெட்டி சாய்க்கும்படி வச்சிட வேண்டாம். இவ்வாறு ரஜினி பேச, அதுவரை ரஜினியை கன்னட வெறியர்களுக்கு ஆதரவானவர் என்று நினைத்திருந்த பலரின் இமேஜ் பொடிப்பொடியாக தகர்ந்து போனது.

இதே நாளில் கர்நாடகாவில் நடந்த உண்ணாவிரதத்தில் தமிழில் நடிக்கும் ரம்பா, திவ்யா ஆகியோர் கலந்து கொண்டது பலரது புருவத்தையும் உயர வைத்திருக்கிறது.